திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட காமனூர் தட்டுமலை கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் (23) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி (20) என்ற பெண்ணைக் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் காதலுக்குப் பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோர்கள் காயத்ரியை வெளியூருக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அரவிந்த் கடந்த மார்ச் 19 ஆம் தேதியன்று ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தான் காதலித்த பெண்ணை அவரது பெற்றோர்கள் வெளியூருக்கு அழைத்துச்சென்று விட்டதாகவும், நாங்கள் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் தங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், இதனால் நான் அதிக மன உளைச்சலில் இருப்பதாகவும், தங்களைச் சேர்த்து வைக்கும்படி அரவிந்த் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பின்னர், காதலியின் வீட்டிற்கு அரவிந்த் சென்ற போது பெண்ணின் உறவினர்கள் அரவிந்தைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அரவிந்த் கடந்த மார்ச்.23ஆம் தேதியன்று தற்கொலைக்கு முயன்று அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், அரவிந்த் கடந்த 10 நாட்களாக ஆம்பூர் அரசு மருத்துவமனை மற்றும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையிலிருந்துள்ளார். பின்னர், மேல் சிகிச்சைக்காகக் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அங்கு அரவிந்த் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், அரவிந்த் உயிரிழந்ததை காவல்துறையினருக்குத் தெரிவிக்காமலும், பிரேதப் பரிசோதனை செய்யாமலும், அவரது உறவினர்கள் அரவிந்தின் உடலை அடக்கம் செய்யச் சொந்த ஊரான காமனூர் தட்டு மலைக்கிராமத்திற்குக் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் அரவிந்தின் உறவினர்களிடம் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த பின்னரே அடக்கம் செய்ய வேண்டும் என கூறியபோது, உறவினர்கள் அப்பெண்ணின் குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஏற்கனவே இதுகுறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமலிருந்ததாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பேச்சு வார்த்தைக்குப் பின்னர் காவல்துறையினர் அரவிந்த் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சாதிய ரீதியாகக் காதலுக்குப் பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 என்கிற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது சிநேகா உதவி எண்ணுக்கு (044-24640050) அழையுங்கள். மேலும், இணைய வழித் தொடர்புக்கு (022-25521111) என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
மேலும், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள help@snehaindia.org எனும் மின்னஞ்சல் முகவரியிலும், நேரில் தொடர்புகொள்ள சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம் சென்னை - 600028 என்கிற முகவரிக்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.
இதையும் படிங்க: கச்சத்தீவை ஒருபோதும் மீண்டும் ஒப்படைக்க மாட்டோம்: இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிரடி! - Kachchatheevu Issue