சென்னை: புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர் ஆன்லைன் மொபைல் கடன் செயலி மூலம் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி உள்ளார். இதனை அடுத்து, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்கு நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் கோபி கடன் வாங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆன்லைன் மொபைல் கடன் செயலி மூலம் வாங்கிய கடனை உடனடியாக அடைக்க வேண்டுமென அச்செயலி நிர்வாகிகள் கோபிக்கு அழுத்தும் கொடுத்ததாகக் கூறப்படும் நிலையில், கோபி தான் பெற்ற ரூ.30 ஆயிரம் ரூபாய் கடனை வட்டியுடன் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், ஆன்லைன் கடன் செயலி நிறுவனத்தினர் கடனை திருப்பச் செலுத்தவில்லை எனக் கூறி, தொடர்ந்து பணத்தை உடனடியாக கட்ட வேண்டும் என்றும், இல்லை என்றால் உங்கள் தொலைபேசியில் உள்ள அனைத்து நபர்களுக்கும் தெரிவிப்போம் எனவும் கூறியதாகவும் தெரிய வருகிறது.
பின்னர், தனது செல்போனில் இருந்த அந்த ஆன்லைன் கடன் செயலியை கோபி நீக்கி உள்ளார். அதனைத் தொடர்ந்து, ஆன்லைன் கடன் செயலி தரப்பில், கோபியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபி கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு (புதன்கிழமை) தனது வீட்டின் படுக்கை அறைக்குச் சென்ற கோபி, இன்று (வியாழக்கிழமை) காலை வெகு நேரம் ஆகியும் கதவை திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கோபி தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எழும்பூர் போலீசார், கோபியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோபி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் (WhatsApp Status) தான் கடன் பெற்ற செயலி மூலம் யாரும் கடன் வாங்க வேண்டாம் எனக் குறிப்பிட்டு, தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்துடன் வைத்திருந்துள்ளார். அதனைக் கைப்பற்றிய போலீசார், தனியார் ஆன்லைன் கடன் செயலி தரப்பில் கோபியை மிரட்டியவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் வாங்கிய இளைஞர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் குறிப்பிட்ட சில செயலிகளை முடக்கினர். இந்த நிலையில், சென்னையில் மீண்டும் ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் வாங்கிய இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎஸ் கனவுடன் இருந்த 17 வயது மாணவி தற்கொலை.. நடந்தது என்ன?