சென்னை: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுடரொளி (34). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், அதே நிறுவனத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இதனிடையே, அப்பெண்ணும் சுடரொளியும், வாட்ஸ்ஆப்பில் வீடியோ கால் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சுடரொளி அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அந்த பெண்ணிடம் ஆடையின்றி வீடியோ காலில் வருமாறு கூறியுள்ளார்.
அதனை அடுத்து, இருவரும் வீடியோ காலில் ஆடையின்றி பேசியுள்ளனர். அப்போது அப்பெண்ணுக்கு தெரியாமல் சுடரொளி அந்த வீடியோ காலை ஸ்கிரீன் ரெக்காடிங் எடுத்துள்ளார். இதனிடையே, சுடரொளியின் நடவடிக்கை பிடிக்காத காரணத்தினால், அப்பெண் திருமணம் செய்து கொள்ள மறுத்தாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபம் அடைந்த சுடரொளி, தான் காதலித்து வந்த பெண்ணின் நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனைக் கண்டு மன வேதனை அடைந்த அந்தப் பெண், உடனே சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்புகார் தாம்பரம் கமிஷனர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சுடரொளி செல்போன் எண்ணை பயன்படுத்தி, இன்ஸ்டாகிராம் பக்கத்தை துவக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் சுடரொளி தங்கியிருந்த இடம் மற்றும் அவர் பணிபுரியும் நிறுவனங்களுக்குச் சென்று விசாரித்ததில் அவர் தலைமறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதன் பின்னர், சுடரொளி செல்போன் டவர் வைத்து பார்த்த போது அவர் சீர்காழி அடுத்த திருவங்காடு பகுதியில் இருப்பது தெரிய வந்துள்ளது.
அப்பகுதிக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், சுடரொளியை அவரது வீட்டில் வைத்து கைது செய்து, பின்னர் தாம்பரம் கமிஷனர் அலுவலகம் அழைத்து வந்தனர். மேலும், அவரது செல்போனில் இருந்த மற்றும் சமூக வலைத்தளங்களில் இருந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அழித்தனர். அதன் பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி, அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தீபக் ராஜா கொலை செய்யப்பட்டது ஏன்? - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!