தென்காசி: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சேர்ந்தவர் ஹாஜி முகம்மது(23) இவருக்கும், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் முகநூல் வழியாக நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தொடர்புகொண்டு பேசியுள்ளனர். திடீரென அந்த பெண்ணுக்கு உறவினர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் ஹாஜி முகம்மது உடனான தொடர்பை அந்த பெண் நிறுத்திக்கொண்டார். பல முறை முயன்றும் அவரிடம் பேச முடியாததால் ஹாஜி முகம்மது விரக்தியடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பெண்ணின் சமூக வலைதள பக்கத்தை பார்த்த ஹாஜி முகம்மது அவரது உறவினர்களின் சமூக வலைதள பக்கத்தை பார்த்து வைத்துக் கொண்டு அவர்களுக்கு பெண் தோழியின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து மார்பிங் செய்து அனுப்பியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பெண், உறவினர்களிடம் நடந்ததை கூறியதை தொடர்ந்து, அப்பெண் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஹாஜி முகம்மது மீது புகார் அளித்துள்ளார்.
அதன்படி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், ஏடிஎஸ்பி தனராஜ் கணேசன் மேற்பார்வையில் சைபர் கிரைம் ஆய்வாளர் வசந்தி தலைமையல் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஹாஜி முகம்மதுவை தேடி வந்தனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போன் எண் மூலம் அவரது சொந்த ஊரான நாகப்பட்டினத்திற்கு சென்று குற்றவாளியான ஹாஜி முகம்மதை கைது செய்தனர்.
பின்னர் குற்றவாளியை தென்காசிக்கு அழைத்து வந்து இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 66C, 67,66D, 67A,354 C, 294(b) உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சமூக வலைதளங்களில் முகம் தெரியாத நபர்களிடம் பழகி தங்களது புகைப்படங்கள் மற்றும் விவரங்களை அனுப்புவதால் பல்வேறு பிரச்சனைகள் நாளுக்கு நாள் அரங்கேறி வருவதால், பொதுமக்கள் இது போன்ற விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட்டு சமூக வலைதளங்களை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளிகள்!