திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அடுத்த தாமலோரி முத்தூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர் சண்முகம் - மலர் தம்பதி. இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதில் முதல் மகன் சந்தோஷ் (30) மற்றும் இரண்டாவது மகன் சஞ்சய் (24) ஆவர்.
இந்நிலையில், முதலாம் மகன் சந்தோஷ், கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அன்று இரவு, அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு, அவரது தாய் மற்றும் சகோதரியை இரவு ஒரு மணி அளவில் அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனை, இளைய மகனான சஞ்சய் தடுக்க முயற்சித்துள்ளார்.
ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் ஆத்திரம் அடைந்த சஞ்சய், அருகில் இருந்த கல்லை எடுத்து சந்தோஷ் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த சந்தோஷ், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். பின்னர், அவரை உடனடியாக மீட்ட குடும்பத்தினர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது, மருத்துவர்களிடம் சந்தோஷ், இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து தலையில் காயம்பட்டதாக கூறியுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், தலையில் பலத்த காயமடைந்துள்ளதால், அவரை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சிகிச்சையில் இருந்த சந்தோஷ் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இருசக்கர வாகனத்தில் இருந்து சந்தோஷ் கீழே விழுந்து உயிரிழக்கவில்லை எனவும், அவரது தம்பி சஞ்சய் கல்லால் தலையில் தாக்கியதன் காரணமாக சந்தோஷ் உயிரிழந்திருப்பதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், காவல்துறையினர் சஞ்சயிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, தனது தாயையும், அக்காவையும் அடித்ததன் காரணமாக, கல்லை வைத்து தாக்கினேன். அதனால் தான் அண்ணன் சந்தோஷ் உயிரிழந்தார் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர், சஞ்சய் மீது வழக்குப் பதிவு செய்த ஜோலார்பேட்டை காவல்துறையினர், அவரை கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.