சென்னை: தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயில் அதிகரிக்க தொடங்கிய நிலையில் கோடை தொடங்கியவுடன் வெப்பம் மேலும் அதிகரித்து பல்வேறு பகுதிகளிலும் வெப்ப அலை வீசியது. சென்னை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் அளவு 100 டிகிரியை எட்டியது.
மே மாதம் தொடங்குவதற்கு முன்னரே தமிழகத்தில் வெயில் வெளுத்து வாங்கியதால் அன்றாடப் பணிகளுக்காக வீட்டிலிருந்து வெளியில் சென்று வருபவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். குறிப்பாக சென்னையில் காலையில் இருந்தே சூரியன் சுட்டெரிக்க தொடங்குகிறது. இதற்கு மத்தியில் கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் காற்றுடன்கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிவையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வரும் 18ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி முதல் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, விருதுநகர், தென்காசி தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் கடலோர மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திறந்தவெளியில் கட்டுமானப் பணிகள் கூடாது' - வெயில் காரணமான அதிரடி உத்தரவு