சென்னை: நில பிரச்னை தொடர்பாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த, 3 லட்சம் ரூபாய் பணத்தை லஞ்சமாக வாங்கிய பெண் தாசில்தார் சரோஜா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காவலர் அருண்குமார் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொன்.தங்கவேல் எனும் சமூக ஆர்வலர், தனது பகுதியில் உள்ள அரசு நில ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க பலவாறு முயற்சித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்றி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவு குறித்து சென்னை மாநகராட்சி, மண்டலம் 15-இன் உதவி கமிஷனரிடம் கொண்டு சென்றும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததாகக் கூறி, புகார்தாரர் தெற்கு மண்டல துணை ஆணையரைச் சந்தித்து நீதிமன்ற உத்தரவு குறித்து விளக்கியுள்ளார்.
இதையடுத்து, அவர் 3 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக உறுதி அளித்ததோடு, தாசில்தார் சரோஜாவை இது குறித்து கண்காணிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, பெண் தாசில்தார் சரோஜா புகார்தாரரை அழைத்து, “ஆக்கிரமிப்பை அகற்றினால் உங்கள் நிலத்தின் மதிப்பு அதிகரிக்கும், எனவே, ஆக்கிரமிப்பை ஒட்டிய நில உரிமையாளரிடம் பணத்தை வசூலித்து, ஒரு கோடி ரூபாயை என்னிடம் கொடுங்கள்” என லஞ்சம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த புகார்தாரர் அங்கிருந்து உடனே வெளியேறியுள்ளார்.
பின்னர், பெண் அதிகாரி சரோஜா, புகார்தாரரை தனது வீட்டிற்கு வரவழைத்து, அவரிடம் 20 லட்சம் ரூபாய் பேரம் பேசி, முன்பணமாக 3 லட்சம் ருபாய் தருமாறு கேட்டுள்ளார். மேலும், அந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை தனது அலுவலகத்திற்கு கொண்டு வருமாறு புகார்தாரரிடம் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்கத் தயாராக இல்லாத புகார்தாரர், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, பெண் தாசில்தார் சரோஜா, புகார்தாரரிடம், சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று, அங்குள்ள காவலர் அருண்குமாரிடம் 3 லட்சம் ரூபாய் பணத்தை அளிக்குமாறும், அந்தப் பணத்தை ஆயுதப்படை தலைமைக் காவலராக பணிபுரியும் தனது கணவர் பிரவீன் என்பவரிடம் காவலர் அருண்குமார் அளித்துவிடுவார் எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, புகார்தாரர் லஞ்ச ஒழிப்பு துறையினரை அழைத்துக் கொண்டு, மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். பின்னர் ரசாயணம் தடவிய பணத்தை பெற்றுக் கொண்ட காவலர் அருண்குமார் அங்கிருந்து புறப்படத் தயாராகும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெண் தாசில்தார் சரோஜாவிற்காக பணம் பெற்றக் கொண்டதை ஒத்துக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புதுறையினர் காவலர் அருண்குமார் மற்றும் சரோஜா ஆகிய இருவரையும் கைது செய்து, நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.