சென்னை: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ஸ்ரீ தீப்பாஞ்சம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 48 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது. இதில், வியாசர்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
தீமிதி திருவிழாவின் பாதுகாப்பிற்காக சத்தியமூர்த்தி நகர் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் தீக்குண்டத்தை சுற்றி தயார் நிலையில் இருந்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீக்குழியில் இறங்கினர். இதில், வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பானு (வயது 45) என்ற பெண் தீயில் இறங்கியவுடன் எதிர்பாராத விதமாக கால் தடுமாறி தீக்குண்டத்தில் விழுந்துள்ளார்.
இதையும் படிங்க: 'திமுக பவள விழாவுக்கு மட்டும் எப்படி அனுமதி?' 'கோர்ட்டின் பொறுமையை சோதிக்காதீங்க' - ஆர்எஸ்எஸ் விவகாரத்தில் அரசுக்கு எச்சரிக்கை!
பெண் தீக்குண்டத்தில் விழுந்ததைக் கண்ட தீயணைப்பு படை வீரர்கள், உடனடியாக பெண்ணை தீயில் இருந்து மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கால் மற்றும் கை ஆகிய இடங்களில் லேசான தீக்காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேர்த்திக்கடனை நிறைவேற்ற தீக்குண்டத்தில் இறங்கிய நிலையில் தீக்குண்டத்தில் விழுந்த சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீக்குண்டத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால், உடனடியாக தீயில் விழுந்த பெண் மீட்கப்பட்டுள்ளார். தற்போது இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்