தூத்துக்குடி: தூத்துக்குடியை சேர்ந்தவர் சி.த.செல்லபாண்டியன் இவர் அதிமுகவில் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர். தற்போது, அதிமுக வர்த்தக அணியில் மாநில பொறுப்பில் பதவி வகித்து வருகிறார். இவரது மகன் ஞானராஜ் ஜெபசிங். இவருக்கு திருமணமாகி ஏற்கனவே மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், ஜெபசிங்கிற்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்த ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, வீட்டை விட்டு வெளியேறிய ஜெபசிங், ரேவதியுடன் தனியாக வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்போது, வீடு ஒன்று வாங்குவதற்காக ஜெபசிங் ரேவதியிடம் பணம் மற்றும் நகைகளை கேட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, ரேவதி ஜெபசிங்கிற்கு தன்னிடம் இருந்த ரூபாய் 30 லட்ச பணம் மற்றும் 35 பவுன் தங்கநகைகளை அடகு வைத்து வீடு வாங்க கொடுத்துள்ளார். ஆனால், வீட்டை ஜெபசிங் அவரது பெயரில் பத்திரம் முடித்துள்ளார். இந்நிலையில், அந்த வீட்டை விற்க ஜெபசிங் வேறு ஒருவரிடம் அட்வான்ஸ் பெற்று உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ரேவதி காதலன் ஜெபசிங்கிடம் தனது பெயரில் வீட்டை மாற்றி தர வேண்டும். இல்லையென்றால், தனக்குரிய ரூபாய் 30 லட்சம் மற்றும் தங்க நகைகளை உடனே திருப்பி தரவேண்டும் என கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, ரேவதிக்கு தொலைபேசி மூலம் ஜெபசிங் மிரட்டல் விடுத்து வருவதாகவும், ஜெபசிங் தன்னை தாக்கியதாகவும் ரேவதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (ஜன.23) தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் மகன் ஞானராஜ் ஜெபசிங் மீது புகார் அளித்துள்ளார்.
தற்போது காதலன் ஜெபசிங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக கடந்த 5 மாதங்களாக தனது தாய் வீட்டில் வசித்து வரும் ரேவதி தற்போது முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியன் மகனும் தனது காதலனுமான ஜெபசிங் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் மகன் ஞானராஜ் ஜெபசிங் ஏற்கனவே, முந்திரி பருப்பு லாரியை கடத்தியதாக கடந்த 2022ஆம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்ற பின்பு, இது குறித்து ரேவதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'நான் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்ட அவர் இது குறித்து விரைவில் நீதிமன்றத்தை நாட உள்ளதாக' தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோடநாடு வழக்கில் ஈபிஎஸ் பற்றி கருத்து தெரிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உதயநிதி மனு!