சென்னை: அமைந்தகரை பகுதியில் ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்தில் இருந்த பலகை திடீரென உடைந்து விழுந்ததில், பின் சீட்டில் அமர்ந்து பயணம் செய்த பெண் ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். சக பயணிகள் உடனடியாக கூச்சலிடவே, அலறல் சத்தம் கேட்டு பேருந்தை நிறுத்தியதால், அதிர்ஷ்டவசமாக கீழே விழுந்த பெண் பயணி உயிர் தப்பியுள்ளார்.
தினசரி பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் பெரும்பாலான பொதுமக்கள் அரசுப் பேருந்துகளை நம்பியே உள்ளனர். ஆனால், சரியான பராமரிப்பு இல்லாததால் பல அரசு பேருந்துகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருவதாக தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
சமீபத்தில் கோவையில் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து ஒன்று, பொதுமக்கள் நிறைந்த சாலையில் அச்சுறுத்தும் வகையில் ஓடி, எதிரில் வந்த மற்றொரு பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் படுகாயமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது மட்டுமின்றி இயந்திரக் கோளாறு, மழைக் காலத்தில் பேருந்திற்குள் குடை பிடித்துச் செல்லும் அவலங்களும் நடந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், இன்று சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் நோக்கிச் சென்ற அரசு மாநகரப் பேருந்தின் பின் சீட்டின் அருகே பலகை உடைந்திருந்துள்ளது.
இதனை கவனிக்காத பயணிகள், வழக்கம்போல பேருந்தில் அமர்ந்து பயணித்துள்ளனர். பேருந்து 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் அமைந்தகரை அடுத்த என்.எஸ்.கே.நகர் சிக்னலைக் கடந்து கொண்டிருந்தபோது, பலகை முழுவதுமாக உடைந்து கீழே விழுந்துள்ளது. அப்போது, பேருந்தின் பின் சீட்டில் அமர்ந்து பயணம் செய்த பெண் ஒருவர், சீட்டில் இருந்து வழுக்கி கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து, அந்தப் பெண் பேருந்தை இறுகப் பிடித்துக் கொண்டதால், சிறிது தூரம் கீழே விழுந்தவாரே இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அலறல் சத்தம் கேட்டதால், ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தியுள்ளார். இதையடுத்து, கீழே விழுந்ததில் காயமடைந்த பெண்ணை மீட்ட சக பயணிகள், அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்துள்ளனர். இந்நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை வீடியோ எடுத்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரிடமும் போக்குவரத்து புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பலகை உடைந்திருந்த நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் பேருந்தை தொடர்ந்து இயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதையும் படிங்க: கோரமண்டல் போன்ற விதிகளை மதிக்காத நிறுவனங்களை இனி தமிழகத்தில் செயல்பட அனுமதிக்க முடியாது - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்