மதுரை: சென்னையிலிருந்து மதுரை நோக்கி இன்று அதிகாலை வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில், 3 மாத கைக்குழந்தையுடன் ஆண் பயணி ஒருவர் அம்பாத்துரை ரயில் நிலையத்தில் ஏறியுள்ளார். அப்போது அந்த குழந்தை பசியால் நீண்ட நேரம் அழுததை பார்த்த சக பயணிகள், குழந்தையை வைத்திருந்த நபர் மீது சந்தேகமடைந்துள்ளனர். இதனையடுத்து, மதுரை ரயில் நிலையத்தில் குழந்தையுடன் அந்த நபர் இறங்கியுள்ளார்.
இந்நிலையில், மதுரை ரயில் நிலையத்தில் இறங்கிய மற்ற பயணிகள், அந்த நபர் குழந்தையை கடத்திs செல்கிறார் என நினைத்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், அந்த நபரை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் குழந்தையின் தந்தை எனவும், கணவர் - மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக குழந்தையை தூக்கி வந்ததும் தெரிய வந்துள்ளது.
பின்னர், போலீசார் அவருடைய மனைவிக்கு தகவல் கொடுத்து, குழந்தையை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்தனர். இதனிடையே நள்ளிரவு 2 மணி முதல் பச்சிளங்குழந்தை பசியால் அழுது கொண்டிருந்த நிலையில், குழந்தையின் தந்தை பால் பாட்டில் மூலமாக பால் கொடுக்க முயற்சித்துள்ளார்.
அப்போதும் குழந்தை பால் அருந்தாமல் தொடர்ந்து அழுது கொண்டிருந்துள்ளது. இந்நிலையில், கோயம்புத்தூர் நோக்கி செல்வதற்காக மதுரை ரயில் நிலையத்திற்கு வருகை தந்த பெண் ஒருவர், குழந்தையின் பசியை உணர்ந்து தாய்ப்பால் கொடுத்துள்ளார்.
பெண் பயணியின் செயல் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், தாய்ப்பால் ஊட்டிய அந்த பெண் பயணியை பாராட்டும் விதமாக, இனிப்புகளை கொடுத்து ரயில் பயணிகளும், ரயில்வே காவல்துறையினரும் பாராட்டி வழி அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: “தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை.. மக்களை நம்பியுள்ளோம்” - திருமாவளவன் குற்றச்சாட்டு!