திருப்பத்தூர்: அதிமுக ஆட்சியில் தன்னை வேலையிலிருந்து நீக்கியதாகக் கூறி, வாக்கு சேகரிக்க வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினரிடம் முறையிட்டதால், கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் தனது குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகப் பெண் ஒருவர் இன்று (ஏப்.04) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் காந்தி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் இசைவாணி (38). இவர் கடந்த 2014 ம் ஆண்டு முதல் உதயேந்திரம் பேரூராட்சியில் தற்காலிக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021 ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்தபோது, எந்த ஒரு சரியான காரணமும் இல்லாமல் இசைவாணி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதனால் இசைவாணி கடந்த 3 ஆண்டுகளாக வேலை ஏதும் கிடைக்காமல், வாழ்வாதாரத்திற்குத் திண்டாடி வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த ஏப்.02 ம் தேதி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து உதயேந்திரம், காந்தி நகர் பகுதியில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்துள்ளார்.
அப்போது கடந்த 3 ஆண்டுகளாக வேலை இல்லாமல் திண்டாட்டத்திலிருந்து வந்த இசைவாணி அவரது நிலை குறித்து சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் முறையிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் தான் தன்னை பேரூராட்சி பணியில் இருந்து நீக்கியதாக அவர் செந்தில்குமாரிடம் ஆதங்கத்துடன் வாதிட்டுள்ளார். இதனால் பிரச்சாரம் நடந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து பிரச்சாரத்திற்கு வந்தபோது சட்டமன்ற உறுப்பினரிடம் கேள்வி கேட்டதால், இசைவாணியின் குடும்பத்தினர் தற்போது ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதயேந்திரம், காந்திநகர் பகுதி பஞ்சாயத்து நாட்டாமை முனுசாமி மற்றும் ஊர் பஞ்சாயத்து நிர்வாகிகள் கார்த்திகேயன் மற்றும் குமார் ஆகியோர், தன் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து பஞ்சாயத்தில் தீர்மானம் போட்டுள்ளதாகவும், தனக்கு இதில் ஞாயம் கிடைக்க வேண்டும் எனவும் இசைவாணி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் அவர் புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பிரச்சாரத்திற்காகக் கடந்த ஏப்.02 ம் தேதி வந்திருந்தார். அப்போது அவர்களது கட்சி ஆட்சியில் இருந்த நேரத்தில், என்னை வேலையை விட்டு நீக்கியதால் ஆதங்கத்தில் நான் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் முறையிட்டேன். நான் எம்.எல்.ஏ வை கேள்வி கேட்டதற்காக தற்போது எங்கள் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். எங்களுக்கு இதற்கான சரியான பதில் கிடைக்க வேண்டும்” என கண்ணீர் மல்க கூறியுள்ளார். கேள்வி கேட்டதற்காக குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.