திண்டுக்கல்: பழனி அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ளது, பாலாறு பொருந்தலாறு அணை. இப்பகுதிக்கு 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தங்களது குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக வருகை புரிவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், இவை விளை நிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்துவிடுமோ என்று விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த காட்டு யானைகளை பார்ப்பதற்காக கொடைக்கானல் மலைப்பாதை 2வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மாலைநேரத்தில் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். அவர்கள் யானைகளைக் கண்டும் புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர். பழனியை அடுத்த ஆயக்குடி, சட்டப்பாறை, கோம்பைப்பட்டி, கணக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் கொய்யா, மக்காச்சோளம், கரும்பு ஆகியவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
இக்கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருப்பதால் காட்டு யானைகள், காட்டு மாடுகள், காட்டு பன்றிகள் உள்ளிட்டவை இரவு நேரங்களில் தோட்டங்கள், விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால், அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, ஆயக்குடி, சட்டப்பாறை பகுதியில் முகாமிட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட யானைகளை ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால், விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்த நிலையில், தற்போது யானைகள் மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அணைப் பகுதியில் முகாமிட்டுள்ளன.
இவை எந்நேரம் வேண்டுமானாலும் விளைநிலங்களுக்குள் நுழைய வாய்ப்புள்ளதால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, ''மழை பெய்து வருவதால் வறட்சியாக இருந்த வனப்பகுதிகள் பசுமைக்கு மாறி வருகிறது. அதனால், விலங்குகளுக்கு தேவையான உணவுகள் வனப்பகுதியிலேயே கிடைக்கும் சூழல் நிலவுகிறது. இருப்பினும், காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்'' என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பழனி கிரிவலப்பாதை ஆக்கிரமிப்பு விவகாரம்; திண்டுக்கல் ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு! - Palani temple Girivalam path