கோயம்புத்தூர்: கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அனுபமா (38). இவருக்கும், தேவ்குமார் மிஸ்ரா என்பவருக்கும் 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2008ஆம் ஆண்டு விவாகரத்து ஆகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, தேவ்குமார் மிஸ்ரா வரதட்சணையாக அனுபமாவிடம் இருந்து பெற்ற நகைகளை விற்று, கோவை வடவள்ளி பகுதியில் வாங்கி இருந்த இடத்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அனுபமா பெற முயற்சி செய்துள்ளார்.
அப்போது, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், தான் வழக்கறிஞர் என்றும், இது போன்ற பிரச்னைகளை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து முடித்து தருவதாகவும் கூறி அனுபமாவிடம் அறிமுகமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அனுபமாவும், செந்தில்குமாரும் பழகி வந்துள்ளனர்.
இதன் பின்னர், அனுபமாவை காதலிப்பதாகவும், தன்னுடைய மனைவி விவாகரத்து செய்து தனியாக வசித்து வருவதால் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் செந்தில்குமார் கூறி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2010ஆம் ஆண்டு செந்தில்குமாருக்கும், அனுபமாவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்குப் பிறகு அனுபமா பெயரில் உள்ள கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தனக்கு தர வேண்டும் என செந்தில்குமார் வலியுறுத்தியதாகவும், அதனை அனுபமா தர மறுத்ததால், செந்தில்குமார் அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது.
இதன் பின்னர், சில நாட்கள் கழித்து அனுபமாவை சமாதானப்படுத்தி அழைத்து வந்து, கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் அபார்ட்மெண்டில் வசித்து வந்துள்ளனர். இதற்கிடையே, கடந்த 2023ஆம் ஆண்டு செந்தில்குமாரின் அலுவலகத்தில் பணிபுரியும் மற்றொரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை அறிந்த அனுபமா, தனது கணவர் செந்தில்குமாரிடம் இது குறித்து கேட்டதாகவும், அப்போது அவர், அந்தப் பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளதாகத் தெரிகிறது. மேலும், 2022ஆம் ஆண்டு தான் செந்தில்குமார் மதுரை நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற விவரம் தெரியவந்ததாகவும், ஆனால் அதற்கு முன்பாகவே ஏற்கனவே விவாகரத்து ஆனதாகக் கூறி தன்னை திருமணம் செய்து மோசடி செய்ததாகவும் அனுபமா, செந்தில்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிய வருகிறது.
இதுமட்டுமல்லாது, செந்தில்குமார் சுமார் ரூ.7 கோடி பணம் தந்தால் மட்டுமே சேர்ந்து வாழ்வேன் எனக் கூறி தன்னை வீட்டில் இருந்து துரத்திவிட்டதாக அனுபமா, கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் கோவை மாநகர காவல் ஆணையரிடம் தான் அளித்த புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, தற்போது அனுபமா கோவை மாநகர காவல் ஆணையரைச் சந்தித்து மீண்டும் புகார் அளித்துள்ளார்.
மேலும், செந்தில்குமார் தன்னிடம் இருந்து 50 பவுன் தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்து விட்டதாகவும் அனுபமா கொடுத்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இறந்தும் 7 பேரை வாழ வைத்த நபர்: விபத்தில் மூளைச்சாவடைந்தவரின் உடலுக்கு ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் அஞ்சலி!