தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கே.வேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (67). இவரது மனைவி வசந்தா, மகன் ரஜினிகாந்த் (43), சுரேஷ்குமார் (41) உள்ளனர். ஜெயராஜ், தூத்துக்குடி துறைமுகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்றபோது வந்த 40 லட்சம் பணத்தை வைத்துக் கொண்டு தேவை இல்லாமல் செலவு செய்து கொண்டு, குடும்பச் செலவுகளுக்கு கொடுக்காமலிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அவரது மனைவி வசந்தாவையும் அடிக்கடி சந்தேகப்பட்டு துன்புறுத்துவதுடன், பணம் ஏதும் கொடுக்காமலிருந்து வந்துள்ளார். இதனால், அவ்வப்போது அவர்களுக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இன்று (பிப்.25) கணவன் மற்றும் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன்பின் ஜெயராஜ் வீட்டில் தூங்கி உள்ளார். அப்பொழுது தூங்கிக் கொண்டிருந்த ஜெயராஜ் மீது, அவரது மனைவி வசந்தா அம்மிக்கல்லைக் கொண்டு இரண்டு முறை தலையில் அடித்துள்ளார். தொடர்ந்து அவரது இளைய மகன் சுரேஷ்குமாரும் அம்மிக்கல்லைக் கொண்டு அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஜெயராஜ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து வசந்தா, அவரது மகன் சுரேஷ்குமார் ஆகிய இருவரும் உடனடியாக ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ் தலைமையிலான காவல்துறையினர், கொலைச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், ஜெயராஜ் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைச் சம்பவம் குறித்து ஜெயராஜ் மனைவி வசந்தா மற்றும் அவரது மகன் சுரேஷ்குமார் ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈபிஎஸ் குறித்து அவதூறாக பேசியதாக சென்னை கமிஷனர் ஆபிஸில் புகார்