மதுரை: மதுரையைப் பொறுத்தவரை, வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக கனமழை பெய்து வருகிறது என்கிறார் தென்காசி வெதர்மேன். மேலும், அவர் கூறுகையில், “பொதுவாக மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை பருவமழை கிடையாது. செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் பதிவாகும் வெப்பச்சலன மழையே இங்கு அதிகம்.
பகலிலும் வெயிலிலும் மாலை, இரவு நேரத்தில் மழை காணப்படும், இதுதான் மதுரையின் சிறப்பு. அக்டோபர் மாதம் மதுரைக்கு மழைக் காலம் என்றாலும், தொடர்ந்து 100 மிமீ-க்கு மேல் மழை பெய்வது மிகவும் அரிதாகவே காணப்படும். இந்த ஆண்டு அடிக்கடி மதுரையில் கனமழை பெய்து வருகிறது.
வரலாற்றில் மதுரை எப்படி? மதுரை மழையின் வரலாற்றை திருப்பிப் பார்க்கும் போது, இந்த அக்டோபர் மாதத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மதுரை நகரைப் பொறுத்தவரை, கடந்த 1955ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி 115 மிமீ மழை பதிவாகியுள்ளது.
அதன் பின்னர் தற்போது 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அக்டோபர் மாதத்தில் 100 மிமீ-க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, கடந்த அக்டோபர் 13ஆம் தேதி மதுரையில் ஒரே நாளில் 110 மிமீ வரை மழை பதிவாகியிருந்தது. 1955ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே அதிகப்பட்ச மழையாகும்.
இதையும் படிங்க: கொட்டித் தீர்க்கும் கனமழை..வெள்ளநீர் புகுந்த குடியிருப்புகள்..மதுரைக்கு பறந்த முதல்வரின் உத்தரவு!
இன்று மதுரை ISRO-வில் 100 மிமீ மழை பதிவாகியுள்ளது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை, வரும் நாட்களிலும் அதிகமழை பெய்யும். ஒட்டுமொத்த வடகிழக்கு பருவமழையையும் இந்த அக்டோபர் மாதத்திலே மதுரை பெற்று விடும்” எனவும் தென்காசி வெதர்மேன் கூறியுள்ளார்.
முன்னதாக, நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் மதுரையில் பெய்யத் தொடங்கிய மழை, மாலை 6.30 மணிக்குப் பிறகும் விடாமல் பெய்தது. இதனால், மதுரை நகர்ப்புறப் பகுதி மட்டுமன்றி, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
மதுரையின் மையப் பகுதியான கோரிப்பாளையம், தெற்குவாசல், தல்லாகுளம், மாவட்ட நீதிமன்றம், கேகே நகர், அண்ணாநகர் பகுதிகளில் ரோட்டில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாட்டுத்தாவணி மற்றும் பெரியார் பேருந்து நிலையத்திலும் மழைநீர் தேங்கியது.
இதனிடையே, கனமழையால் மதுரையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர், அரசு அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும், பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்றுள்ளனர்.