சென்னை: தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்டுவரும் வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளால் தமிழக போக்குவரத்து துறைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரியில் சிக்கல் ஏற்படுவதாக கூறி, இந்த பேருந்துகளை, தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகளாக மாற்ற வேண்டும் என ஏற்கெனவே தமிழக போக்குவரத்து துறை சார்பாக 6 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில், வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்க தடை என கடந்த ஜூன் 12ஆம் தேதி போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் சுற்றுலா விதிகளை மீறி இயங்கும் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் இன்று அறிவிப்பு வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று முதல் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும் வெளிமாநிலப் பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளின் விவரங்கள் 'ரெட் பஸ்' போன்ற டிக்கெட் பதிவு செய்யும் செயலிகளில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன், "தற்போது தமிழ்நாடு பதிவு எண் கொண்ட பேருந்துகளாக மாற்றியது போக மீதமுள்ள பேருந்துகளையும் பதிவு செய்ய தயாராக உள்ளோம் என்றும், எஞ்சியுள்ள பேருந்துகளை பதிவு செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும்" என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நாகாலாந்தில் பதிவு: இந்த நிலையில் ஈடிவி பாரத் செய்தி நிறுவனம் ஆம்னி பேருந்து ஓட்டுநர் ஒருவரை தொடர்புகொண்டு பேசிய போது, “தமிழகத்தில் 1500 ஆம்னி பேருந்துகள் உள்ளன. இதில் 950 பேருந்துகள் வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளாகும். தமிழகத்தில் பேருந்திற்கான வரி, சாலை வரி அதிகமாக இருப்பதால், நாகாலாந்து உள்ளிட்ட பிற மாநிலங்களில் பேருந்துகளை பதிவு செய்து பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் பேருந்து மற்றும் சாலை வரி அதிகம். அதனால் பேருந்து வாங்கும்போதே, வெளி மாநிலங்களில் வாங்கி, இங்கு இயக்குகின்றனர். இதனால் தமிழக அரசிற்கு கிடைக்கும் வருமானம் பாதிக்கப்படுவதாக கூறி, ஆம்னி பேருந்துகளை நிறுத்திவிட்டனர். தற்போது தமிழக அரசு மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பிற மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகளாக மாற்ற கால அவகாசம் வேண்டும். கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உடனடியாக ஒரே நாளில் மாற்றி தருகின்றனர். ஆனால் தமிழகத்தில் அப்படி மாற்றி தருவதில்லை. அப்படி மாற்றி தருவதானாலும் 40 அல்லது 50 நாட்கள் ஆகிறது. எனவே பதிவெண் மாற்றுவதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும்.
தமிழகத்தில் அதிகப்படியாக பிற மாநில ஆம்னி பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இப்போது அந்த அனைத்து ஆம்னி பேருந்துகளும் நிறுத்தப்பட்டதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இது மட்டுமில்லாமல் ஆம்னி பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: பயணிகள் கனிவான கவனத்திற்கு... ராமேஸ்வரம் - ஹூப்ளி ரயில் சேவை டிசம்பர் மாதம் வரை நீட்டிப்பு! - Southern Railway