சென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் போது மரபு, மாண்பை மீறி துணைமுதலமைச்சர் மகன் இன்பநிதிக்கு அமைச்சர்கள் சால்வை அணிவித்தது ஏன் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
எம்ஜிஆருக்கு மரியாதை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரனின் 108 ஆவது பிறந்தநாளையொட்டி அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச்சிலைகளுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அதிமுக கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும் எம்.ஜி.ஆரின் 108 ஆவது பிறந்தநாளை ஒட்டி தயாரிக்கப்பட்ட பிரம்மாண்டமான கேக்கை வெட்டினார். மேலும் தொண்டர்களுக்கு வேஷ்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இந்நிகழ்வில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
தேர்தலை சந்திக்க பயமில்லை: தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்,"தமிழக மக்கள் நெஞ்சங்களில் எம்.ஜி.ஆர் இன்றும் வாழ்ந்து வருகிறார். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எம்.ஜி.ஆர் புகழ் போற்றப்படும். திமுகவை 13 ஆண்டுகள் வனவாசம் அனுப்பி வைத்தவர் எம்ஜிஆர். குடும்ப ஆதிக்க பிடியில் இருந்து தமிழகம் விடுப்பட வேண்டும் என அதிமுகவை தோற்றுவித்து தமிழகத்தில் 11 ஆண்டுகள் முதலமைச்சராக எம்ஜிஆர் ஆட்சி புரிந்தார். இன்றும் பட்டி தொட்டி வரை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பாடல்கள் ஒலித்து வருகிறது. அதிமுக எப்போதும் ஏழைகளுக்கான கட்சி என்பதை உறுதி செய்யும் வகையில் ஆட்சி புரிந்தவர் எம்.ஜி.ஆர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை. பணம் பாதாளம் வரை பாயும். திமுக ஏராளமான பணத்தை செலவு செய்து இடைத்தேர்தலை சந்திக்கும். அதிமுகவை பொறுத்தவரை தேர்தலுக்கு அஞ்சுகிற இயக்கம் அல்ல. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்டாலின் பாட்சா பலிக்காது .விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக மக்களின் நெஞ்சம் கொதித்து போய் உள்ளது.
பாஜகவோடு கூட்டணி இல்லை: பொங்கல் பரிசுத் தொகை வழங்காமல் மக்களை திமுக அரசு வஞ்சித்துள்ளது. ரூ 500 கோடி செலவில் கருணாநிதி பன்னாட்டு மையம் அமைக்க அரசுக்கு பணம் இருக்கிறது ஆனால் இந்த அரசால் பொங்கல் பரிசு தொகை கொடுக்க முடியவில்லை. பாஜக- அதிமுக கூட்டணி உருவாக வேண்டும் என்பது போல பேசுவதை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நிறுத்திக்கொள்ள வேண்டும். குருமூர்த்தி வாய்யை மூடி கொண்டு இருக்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை என கட்சி எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.
அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியில் துணை முதலமைச்சர் உதயநிதி தம் அருகே மகன் இன்பநிதியை உட்கார வைத்துக் கொண்டார். அதனால் மாவட்ட ஆட்சியரே உட்கார இடம் இன்றி நிற்க வேண்டியதாக இருந்தது. இன்பநிதிக்கு அமைச்சர்கள் ஏன் சால்வை அணிய வேண்டும். திமுக அமைச்சர்கள் மரபு மற்றும் மாண்பை மீறி செயல்படுகிறார்கள். அந்த இடத்தில் கேமிரா இல்லை என்றால் இன்பநிதி காலில் கூட அமைச்சர்கள் விழுந்து இருப்பார்கள். தமிழ்நாட்டில் மெத்தபெட்டமைன் போதை மருந்து உபயோகம் அதிகமாக உள்ளது. பாண்டிசேரியில் முதல்வர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதற்கு திமுக ஆதரவு அளிக்கவில்லை. யாருக்கு ஆதரவாக திமுக செல்கிறது என்பதும் அவர்களின் இரட்டை வேடமும் புரிந்திருக்கும்,"என்றார்.