திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தமாக 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் மற்றும் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
தமிழ்நாட்டுடன் இணைந்து 102 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் நிலையில், அனைத்து இடங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளது. சுவர் விளம்பரங்கள் நகர்ப் பகுதிகளில் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு எதிரே, பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரும், நெல்லை சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரனின் சட்டமன்ற அலுவலகம் அமைந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளையொட்டி இந்த அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், அலுவலகத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில், பிரதமர் மோடி மற்றும் நயினார் நாகேந்திரனின் படம் இடம்பெற்றுள்ளதோடு, ‘உங்கள் வீட்டுப் பிள்ளை நயினார் நாகேந்திரன் சட்டமன்ற உறுப்பினர்’ என்ற வாசகமும், பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரை சின்னமும் அதில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக, திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தை அலுவலருக்கு புகார் வந்துள்ளது. புகாரின் அடிப்படையில், நெல்லை சந்திப்பு போலீசார், நயினார் நாகேந்திரன் சட்டமன்ற அலுவலகத்தில் பணியாற்றும் முருகன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திறந்த வெளி அழகை சீர்குலைத்ததாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகவும், சட்டப்பிரிவு 4-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் குறித்து, திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தல் 2024: 18 தொகுதிகளில் நேரடியாக மல்லுக்கட்டும் திமுக - அதிமுக.. முக்கிய புள்ளிகள் யார் யார்? - Admk Vs Dmk Candidates