ETV Bharat / state

காவல்துறையினர் காக்கி சீருடை அணிவது ஏன்? காக்கி சீருடை உருவான கதை! - History of police Uniform - HISTORY OF POLICE UNIFORM

Khaki Uniform History: காவல் துறையினர் காக்கி சீருடை ஏன் அணிகின்றனர் மற்றும் இந்த காக்கி சீருடை உருவான வரலாறு ஆகியவற்றை இந்த செய்தி தொகுப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம்..

File photo of a police parade
காவல்துறையினரின் அணிவகுப்பு தொடர்பான கோப்புப் படம் (Credits: Getty Images)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 3:40 PM IST

சென்னை: காவல் துறை என்ற உடனேயே நமக்கு நினைவிற்கு வருவது காக்கி நிற சீருடைதான். பல்வேறு நாடுகளில் காவல் துறையினருக்கு வெவ்வேறு நிறங்களில் சீருடைகள் உள்ளன. ஆனால், இந்தியாவில் காவல் துறையினர் காக்கி சீருடை ஏன் அணிகின்றனர் என்பதை நாம் விரிவாகப் பார்க்கலாம்.

கார்ப்ஸ் ஆஃப் கைட்ஸ்: 1846 ஆம் ஆண்டு இந்தியாவை இங்கிலாந்து ஆட்சி செய்த காலத்தில் 'கார்ப்ஸ் ஆஃப் கைட்ஸ்' (Corps of Guides) என்ற குழு ஒன்று இருந்தது. அந்த காலகட்டத்தில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த 'பெஷாவர்' (Peshawar) என்ற இடத்தில் இந்த குழு காவலுக்கு இருந்தனர்.

பெஷாவர் பகுதியானது முற்றிலும் மண்ணும் தூசியும் நிறைந்த பகுதி, இந்த பகுதியில் காவலுக்கு இருந்த வீரர்களுக்கு சுற்றுச்சூழலைச் சமாளிப்பது மிகவும் சவாலாக இருந்தது. அப்போது ஆங்கிலேயர்களிடம் இருந்த சீருடையானது இரண்டே நிறத்தில் தான் இருந்தது. ஒன்று சிவப்பு நிற மேலாடை மற்றும் வெள்ளை நிற பேண்ட், மற்றொன்று முழுவதுமாக வெள்ளையாடை.

இந்த உடைகள் அனைத்தும் குளிர் காலத்திற்குத் தகுந்தாற் போல கம்பளியால் தயாரிக்கப்பட்டது. இது இங்கிலாந்து காலநிலைக்குச் சரியாக இருந்தது. ஆனால், இந்தியாவின் காலநிலையோ வெப்பம் அதிகமாக உள்ள நிலப்பகுதி என்பதால், ஆங்கிலேய காவலர்களுக்கு அந்த சீருடையை அணிந்து பணியாற்றுவதில் மிகவும் சிரமம் காணப்பட்டது.

படைத் தலைவர் ஹாரி லும்ஸதேன்: ஆங்கிலேயர்களின் வெள்ளை சீருடையானது எங்கு சென்றாலும் கறைகளும் தூசிகளும் ஒட்டிக்கொண்டு, துவைப்பதற்கும் மிகவும் கடினமாகவும், பார்ப்பதற்கும் அசிங்கமாகவும் இருந்துள்ளது. மேலும், சில இந்தியக் கிளர்ச்சியாளர்கள் ஆங்கிலேய காவலர்களைத் தாக்கும் சமயத்தில், அவர்களைப்போல வேடமணிவதற்கு ஆற்றின் ஓரம் இருந்த மணலை வெள்ளை துணியில் சேர்த்து அந்த ஆற்றில் முக்கி எடுத்து, பார்ப்பதற்கு ஆங்கிலேய வீரர்களின் அழுக்கான வெள்ளை சீருடை போல் உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளனர்.

இதுபோன்ற விஷயங்களை எல்லாம் கவனித்த அந்த படையின் தலைவர் ஹாரி லும்ஸதேன் (Harry Lumseden) சில முடிவுகளை மேற்கொண்டார். அதன் அடிப்படையில், ஆங்கிலேய காவலர்களின் சீருடை எடை குறைவாகவும்; இந்தியக் கிளர்ச்சியாளர்களின் திட்டங்களை முறியடிக்கும் வகையிலும்; இந்தியாவின் காலநிலைக்கு ஏற்றாற்போல் சீருடையின் நிறம் இருக்க வேன்றுமென்று நினைத்தார்.

காக்கி நிறம்: ஹாரி லும்ஸதேன் நினைத்தது போல சீருடையின் நிறத்தை உருவாக்குவதற்கு காபி இலை, தேயிலை, புகையிலை மற்றும் மல்பெரி செடியின் இலை ஆகியவற்றைக் கலந்து மண் சேற்றின் நிறத்தைக் கொண்டு வந்தனர். அதுதான் 'காக்கி' நிறம். உருது மொழியில் 'காக்' என்றால் மண் மற்றும் தூசி என்று அர்த்தம். இத காக்கி நிறத்தை உருவாக்கிய பின்னர் அந்த நிறத்தையே சீருடையின் நிறமாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

இந்த காக்கி சீருடையை உருவாக்கிய பின் சில ஆண்டுகள் எந்த வித மாற்றமும் இல்லாமல் இருந்தது. 1880களுக்கு பின்னர், நவீனமான ஆயுதங்கள் வந்த பிறகு ராணுவப் படைகள், எதிரிகளிடம் அதிக கவனமாக செயல்பட வேண்டியிருந்தது.

வீரர்களுக்கு வழக்கமான தாகுதல் போல நவீன ஆயுதங்களின் தாக்குதல் அவ்வளவு எளிதாக இல்லை. அதிக உயிரிழப்புகள் நேரிடும் அபாயம் இருந்தது. மேலும், தூரமாக தாக்கும் ஆயுதங்களினால் பாதிப்பு ஏற்படும் என்று மறைந்திருந்து தாக்குவதற்குப் பழகினர்.

இப்படி மறைமுக தாக்குதலின் பொதுதான் இந்த காக்கி சீருடையின் சிறப்பம்சம் அனைவரையும் மிகவும் ஈர்த்தது. காக்கி சீருடை மறைந்திருந்து தாக்குவதற்குப் பெரிதும் உதவியாக இருந்தது. முதலாம் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போர் காலங்களில் கூட அனைத்து நாட்டு இராணுவங்களும் அந்தந்த நாடுகளின் சுற்றுச்சூழலுக்கு ஏற்றாற்போல காக்கியின் நிறத்தில் சிறிது வேறுபாடுகள் கொடுத்து சீருடையாக அணிந்து வந்தனர். இன்றும் கூட இந்த காக்கி சீருடைதான் நம் இந்திய நாட்டின் காவலர்கள் பயன்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க: 'இனி யார் மனதையும் புண்படுத்தமாட்டேன்' - நீதிபதியிடம் உறுதியளித்த சவுக்கு சங்கர்?

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.