மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜலெட்சுமி. இந்த தம்பதியிக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருந்தனர். இவர்களது மகள், மயிலாடுதுறை அருகே உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவி, பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், இன்று அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் வந்த போது மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தனியார் பள்ளி நிர்வாகம் மாணவியை அவமானப்படுத்தியதால் தான் தங்களது மகள் தற்கொலை செய்து கொண்டார் என ஆட்சியரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
மேலும், நன்றாக படிக்கக்கூடிய மாணவியை தேர்வில் பிட் அடித்ததாகக் கூறி அனைத்து மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகவும், அதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் தெரிவித்தனர். மாணவி இறப்புக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துச் சென்றார்.
அதேநேரம், மாணவி பிட் அடித்தது குறித்து, மாணவியின் பெற்றோருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து வீட்டில் நன்றாக படிக்க வைக்க சொன்னதாகவும், வகுப்பறை வெளியில் நிற்க வைக்கவில்லை. பிட் அடித்ததற்கான ஆதாரம் உள்ளதாகவும் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஜெயிலுக்கு போகனும்.. அதனால பெட்ரோல் குண்டு வீசுனேன்.. சென்னையில் பரபரப்பு! - PETROL BOMB Attack in Chennai