திண்டுக்கல்: நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு நடந்து வருகிறது. அந்த வகையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுரை மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியினர் இதனை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல, ரியாக்ஷன் கொடுத்து வருகின்றனர். அதாவது, கடந்த 1989ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. அதில், வரதராஜன் வேட்பாளராகக் களம் கண்டார். ஆனால், அதிமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சித்தன் அபார வெற்றி பெற்றார்.
திண்டுக்கல் தொகுதியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திமுக சார்பாகப் போட்டியிட்ட வேலுச்சாமி தமிழ்நாட்டில் அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த தொகுதி திமுகவுக்குத் தான் கிடைக்கும் என எண்ணப்பட்ட நிலையில், தற்போது திமுக ஓர் அதிரடி முடிவெடுத்துள்ளது. அதாவது, திண்டுக்கல் தொகுதியைக் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. இந்த செய்தி திமுக தொண்டர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இந்த நிலையில், திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் யார் நின்றாலும் வெற்றி பெறுவது நிச்சயம் என்ற சூழல் நிலவி வந்தது. ஆகையால் வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியது. தொகுதி ஒதுக்கீட்டு பின், திமுக கூட்டணி உட்பட எதிர்க்கட்சியினர் அனைவரும் உச்சரித்த ஒரு பெயர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி. அவர் போட்டியிடுவதற்கு அதிகளவில் வாய்ப்பு இருப்பதாகவே அனைவரும் தெரிவிக்கின்றனர். முன்னதாக இவர் இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் சார்பாக 2006 முதல் 2016 வரை திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.
இதேபோல, கடந்த சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்துப் போட்டியிட்ட பாண்டி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் சண்முகம் அல்லது சச்சினாந்தம் ஆகியோர் கூட வேட்பாளராகக் களமிறக்கப்படலாம் எனவும் தெரிகிறது. இருப்பினும் வருகின்ற 15ஆம் தேதி சென்னையில் கூட உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழுக் கூட்டத்தில் தான் யார் வேட்பாளர் என்பது முடிவு செய்யப்படும் என கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.