தூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று (மே 22) வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திரமான விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகாலையில் இருந்து அலைமோதி வருகிறது.
திருவிழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. மேலும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கவிருக்கிறது.
பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்பத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருவிழாவை ஒட்டி, கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர்.
பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் திரளான பக்தர்கள் வந்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகின்றனர். வைகாசி விசாகத் திருநாளை ஒட்டி, இன்று ஒரு நாள் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி முத்தையாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான செல்வகனி (26), குடும்பத்தினருடன் நேற்று (மே.21) இரவு திருச்செந்தூர் வந்துள்ளார்.
இன்று கடலில் புனித நீராடிய போது, செல்வக்கனிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோயில் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலுக்கு வந்த இடத்தில் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவத்தால் அவரது உறவினர்கள் கவலையடைந்தனர்.