சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்த வண்ணம் உள்ளது. சென்னை வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதையில் வெள்ள நீர் வேகமாக நிரம்பி வருகிறது. அதனால், கணேசபுரம் ரயில்வே சுரங்கப் பாதையில் செல்ல முடியால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், வியாசர்பாடி ஸ்டீபன்சாலையில் தேங்கியுள்ள மழைநீர் சுரங்கப்பாதைக்குச் செல்வதால் சுரங்கப்பாதை 3 அடி வரை மழை நீரால் மூழ்கியுள்ளது.
தற்போது தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்காக நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. அதேபோல, பெரம்பூர் சுரங்கப்பாதை மழை நீரில் மூழ்கியுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Dear #Chennaiites,
— Greater Chennai Corporation (@chennaicorp) October 15, 2024
Check the current status of the subways under the administration of #GCC in the poster.
All the subways are open to traffic!#ChennaiRains#ChennaiCorporation#HereToServe#NorthEastMonsoon#ChennaiRainsUpdate pic.twitter.com/uLJcqZDY8o
ஆனால், சென்னையில் விடிய விடிய மழை பெய்தபோதும் கூட, நுங்கம்பாக்கம், செனாய் நகர் உள்ளிட்ட 20 சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கவில்லை எனவும், வழக்கமாக இயங்குவதாகவும், பெரம்பூர் சுரங்கப்பாதை மற்றும் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளதாகவும், அவற்றை வெளியேற்றும் பணிகள் விரைந்து நடந்து வருவதாகவும் சென்னை மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொத்தம் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் 20 சுரங்கப்பாதைகள் போக்குவரத்துக்கு தகுதியோடு இருப்பதாகக் குறிப்பிட்டார். 24 மணி நேரத்தில் சென்னையில் ஒரு இடத்தில் கூட மின்தடை ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் பல்வேறு சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, முன்னதாக கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் பெரம்பூர் சுரங்கப்பாதையில் மட்டும் மழை நீர் தேங்கியிருந்த நிலையில், தற்போது கணேசபுரம் சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, பெரம்பூர் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, துறைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சப்வே, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை ஆகிய 8 சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதில், கணேசபுரம், வில்லிவாக்கம், பெரம்பூர் மற்றும் அரங்கநாதன் ஆகிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளததாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைவதால், அக்டோபர் 15 மற்றும் 16ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.
அதுமட்டுமின்றி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 16 ஆம் தேதி அதிக கன மழைக்கான ரெட் அலர்ட்டும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாள்களுக்கு மழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்