சென்னை: தமிழகத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த பத்து தொகுதிகளிலும் தோல்வியுற்ற பாமக 6 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.
பாஜக கூட்டணியில் இணைந்த பாமகவுக்கு ஆரணி, திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், அரக்கோணம், மயிலாடுதுறை, தருமபுரி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 4) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. அதில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக அனைத்திலும் தோல்வியுற்று 11 தொகுதியில் டெபாசிட் இழந்தது.
அதேபோல், பாமகவும் அனைத்து தொகுதிகளிலும் தோற்றது. பாமகவை பொறுத்தவரை, போட்டியிட்ட 10 தொகுதிகளில் தருமபுரியில் மட்டுமே அதிக வாக்குகளைப் பெற்று தோற்றது. அந்த தொகுதியில் நட்சத்திர வேட்பாளராக சௌமியா அன்புமணி போட்டிட்டார்.
திமுக வேட்பாளர் ஆ.மணி 4 லட்சத்து 32 ஆயிரத்து 667 வாக்குகள் பெற்ற நிலையில், 4 லட்சத்து 11 ஆயிரத்து 367 வாக்குகள் வரை சென்று செளமியா அன்புமனி தோல்வியைத் தழுவினார். பாஜக கூட்டணியில் இணைந்த பாமக இத்தகைய தோல்வியைச் சந்தித்ததற்கு தேர்தல் வேலைகளில் தொண்டர்களும், கட்சிக்காரர்களும் முனைப்பு காட்டாமல் இருந்ததுதான் என சொல்லப்படுகிறது.
அத்துடன், வட மாவட்டங்களில் அதிகளவில் வாக்கு வங்கி வைத்திருக்கும் பாமகவோடு கூட்டணி வைத்து பாஜகவிற்கு வாக்கு சதவீதம் அதிகரித்திருந்தாலும், பாஜக - பாமக கூட்டணியை தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் பாஜக - பாமக தொண்டர்களிடம் ஒத்துழைப்பு இல்லாத நிலைமையே பெரும்பாலான இடங்களில் நிலவி வந்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்களிலும் தொய்வு ஏற்பட, குறிப்பாக கிராமப்புறங்களில் திமுக, அதிமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் அவர்களது சின்னங்களைக் கொண்டு சேர்த்ததைப் போல பாஜக - பாமக கூட்டணியினர் செய்யவில்லையாம்.
பாஜக வேட்பாளர்கள் நின்ற இடங்களில் பாமகவினர் பணியாற்றி உள்ளனர். ஆனால், பாமக வேட்பாளர்கள் நின்ற இடங்களில் பாஜகவினர் சரியாக பணியாற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த நிலையில், பாஜகவிற்கு 11.24 சதவீதமாக வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. குறிப்பாக, வடமாவட்டங்களில் வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு வாய்ப்பாக இருந்துள்ளது. இதே கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தால் வடமாவட்டங்களில் பாஜகவின் வாக்குகள் கூடும் என கருதுகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி முறிவால் இழப்பு யாருக்கு?