தேனி: 18வது நாடாளுமன்றத் தேர்தல், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு பாஜக தலைமையிலான கூட்டணியிலுள்ள அமமுகன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் பொதுக்கூட்ட மேடைகளில், “தேனி மாவட்டம் தான் தனது அரசியல் பிறந்த மண்” என அடிக்கடி குறிப்பிட்டு வருவார். ஏனென்றால், தனது முதல் அரசியல் தேர்தல் பயணம் தேனி மாவட்டத்தில் தான் தொடங்கினார். கடந்த 1999ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், முதல்முறையாக தேனி மக்களவைத் தொகுதியில் (தொகுதி சீரமைப்புக்கு முன் பெரியகுளம் மக்களவைத் தொகுதி) அதிமுக சார்பில் போட்டியிட்டார்.
அப்போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் செல்வேந்திரனை விட 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, முதல் முறையாக தேனி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மீண்டும் 2004ஆம் ஆண்டு தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு டிடிவி தினகரனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜே.எம் ஆரூண்னிடம் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
ஆனால், 2004ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி டிடிவி தினகரனுக்கு வழங்கப்பட்டது. பின்னர், அதிமுகவிலிருந்து ஜெயலலிதாவால், டிடிவி தினகரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சில வருடங்களாக கட்சிப் பணிகள் மற்றும் வெளியிடங்களில் தலைகாட்டாத நிலையில், ஜெயலலிதா மறைந்த பின், அதிமுகவை வழிநடத்த சசிகலா மற்றும் டிடிவி தினகரன் மீண்டும் கட்சியில் இணைந்தனர்.
அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 2017ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மதுசூதனனை விட 40,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இருவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். இதனை அடுத்து, 2018ஆம் ஆண்டு அதிமுகவை மீட்பதற்காக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை டிடிவி தினகரன் துவக்கியதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு அமமுக சார்பில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட டிடிவி தினகரன், அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜுவிடம் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். டிடிவி தினகரனுடன் கட்சி நிர்வாகிகளுக்கு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, முக்கிய நிர்வாகிகள் அமமுகவிலிருந்து விலகி வேறு கட்சிகளுக்குச் சென்றனர்.
இந்நிலையில், தற்போது பாஜக கூட்டணியில் அமமுக சார்பாக தேனி தொகுதியில் மீண்டும் தானே போட்டியிடப் போவதாக டிடிவி தினகரன் இன்று (மார்ச் 24) அறிவித்துள்ளார். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் தேனி மக்களவைத் தொகுதியில் தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள், தன்னுடன் இருந்த நபர்கள் இப்போது எதிர் முனையில் நிற்பது என பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் தேனி தொகுதியில் டிடிவி தினகரன் தனது செல்வாக்கை காட்ட முடியுமா என கேள்வி எழுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், அமமுக சார்பில் தனது கட்சியின் வேட்பாளராக நின்ற தங்க தமிழ்ச்செல்வன், தற்போது தனக்கு எதிராக களம் இறங்கும் சூழ்நிலை அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல், 2019ஆம் ஆண்டு அமமுக சார்பில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன், தான் தோல்வி அடைந்ததற்கு கிராமப் பகுதிகளில் உள்ள மக்களிடம் தங்களது கட்சி சின்னத்தைக் கொண்டு செல்ல முடியவில்லை என்ற காரணத்தைக் குறிப்பிட்டு இருந்தார்.
கடந்த காலங்களில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன், தற்போது தேனி மக்களவைத் தொகுதியில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவதால், கிராமப்புறங்கள் அதிகம் நிறைந்த தேனி மாவட்டத்தில், தனது சின்னத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி பெற முடியுமா என கேள்வி எழுகிறது.
குறிப்பிட்ட சமுதாய வாக்குகள் முக்கிய பங்காற்றும் இந்த தொகுதியில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, சோழவந்தான் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ள நிலையில், அதைச் சார்ந்து டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஈரோடு எம்பி கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி? - Erode MP Suicide Attempt