ஹைதராபாத்: "புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி." இது கடந்த ஏப்ரல் 2024 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவு. புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவின் போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி (கடந்த 2023ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி), "நாடாளுமன்றத்தின் மொத்த இடங்கள் மற்றும் எம்.பி.க்களின் எண்ணிக்கையை வருங்காலத்தில் அதிகரிப்பதை காணவிருக்கிறோம். ஆகவே, புதிய நாடாளுமன்றத்தை நிர்மாணிப்பது காலத்தின் தேவையாக இருந்தது" என்று குறிப்பிட்டார். மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட வேண்டும் என்று பாஜக கூறி வருகிறது. ஆனால், இதனை தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் எதிர்க்கின்றன. இந்த விஷயம் குறித்து விரிவாக அலசலாம்.
இந்திய மக்கள் தொகை: இந்தியாவில் கடைசியாக 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. அப்போதைய நிலவரப்படி இந்திய மக்கள் தொகை 121 கோடியாகும். ஆனால், அதன் பிறகு 13 ஆண்டுகள் கடந்திருக்கிறது. ஐநா சபையின் மக்களை தொகை பிரிவின் இயக்குநர் ஜான் வில்மோத், கடந்த2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி அளித்த பேட்டியில், இந்திய மக்கள் தொகை என்பது 142 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மக்கள் தொகை விஷயத்தில் விரைவில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறி விடும் என்றும் தெரிவித்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் சில மாதங்களில் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் அதற்கு அடுத்து மக்களவை தொகுதி மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிகிறது.
தொகுதி எல்லை நிர்ணய சட்டம்: தொகுதி எல்லை நிர்ணய சட்டத்தின்படி(Delimitation Act) வரையறுக்கப்பட்ட கால இடைவெளியில் தொகுதி மறு வரையறை மேற்கொள்ளப்படுகிறது. மக்களவை தொகுதி மறுவரையறை மேற்கொள்வதற்கு முன்பாக இந்த சட்டத்தின் கீழ் தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்படும். மக்கள் தொகையின் அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும். இந்த ஆணையம் என்பது நிரந்தரமான ஒன்றல்ல. தொகுதி மறுவரையறை மேற்கொள்ளும் பணிகள் முடிவடைந்த உடன் அந்த ஆணையத்தின் பதவிகாலமும் முடிவடைந்து விடும்.
இந்தியாவில் 1951ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 1952ஆம் ஆண்டு முதன்முதலில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 494 ஆக இருந்தது. 1956ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டதை அடுத்து 1963ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடைபெற்றது. அப்போது மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 522 ஆக அதிகரித்தது. கடைசியாக 1971ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு பணியின் போது தொகுதிகளின் எண்ணிக்கை 542 ஆக வரையறுக்கப்பட்டது. இதன் பின்னர் சிக்கிம் மாநிலத்தில் ஒரே ஒரு மக்களவைத் தொகுதி மட்டும் இணைக்கப்பட்டு இந்த எண்ணிக்கை பின்னர் 543 ஆக அதிகரிக்கப்பட்டது.இதன் பின்னர் தொகுதி மறுசீரமைப்பு பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. 1957ஆம் ஆண்டு , 1962ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது தமிழ்நாட்டில் 41 மக்களவைத் தொகுதிகள் இருந்தன. ஆனால், இதன் பின்னர் 1973ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறு வரையின் போது இது குறைந்து 39 ஆக ஆனது.
தென்மாநிலங்களுக்காக கொண்டு வரப்பட்ட திருத்தம்: 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 1973ஆம் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் மறு சீரமைப்பு முடிவு என்பது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தியாவின் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்துவதில் மாநிலங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வு நிலவியது. இதனால் தென்மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுக்குள் இருந்தது. ஆனால், வடமாநிலங்களில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தில் போதுமான விழிப்புணர்வு மேற்கொள்ளப்படவில்லை. இதனால் அங்கெல்லாம் மக்கள் தொகை அதிகரித்தபடியே இருந்தது. எனவே மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அமல்படுத்தினால் தென்மாநிலங்களுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்றும், வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டது. எனவே சமசீரற்ற நிலைமையால் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்வதை நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதற்காக அந்தத் தருணத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 81ல் 42வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையில் மாற்றம் செய்யாமல் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொடருவது என்று முடிவு செய்யப்பட்டது. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதால், தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளக்கூடாது என திருத்தத்தில் வலியுறுத்தப்பட்டது. மக்கள் தொகை கட்டுப்பாட்டை முறையாக அமல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் இதனால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
1996ஆம் ஆண்டு நடந்த முயற்சி: இடையே 1991ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதாவது தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் மேற்கொள்ளாமல் தொகுதிகளின் எல்லைகளை மட்டும் வரையறுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 1996ஆம் ஆண்டு இதற்காக அரசியல் சட்டத்தில் 80வது திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆனால், நாடாளுமன்றம் காலாவதியானதால் இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அரசு, 2001ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதி மறு வரையறை செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டது. அப்போது திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன்தான் வாஜ்பாய் அரசு நீடித்தது. எனவே தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநில மக்கள் தொகையில் சமவிகித நிலை இல்லாததால் மீண்டும் 25 ஆண்டுகளுக்கு மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை தள்ளி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்தே மீண்டும் 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறு சீரமைப்பு தள்ளி வைக்கப்பட்டது. அதன் படி வரும் 2026ஆம் ஆண்டு வரை மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தள்ளி வைக்கப்பட்டது.
சட்டம் என்ன சொல்கிறது? : அரசியல் சட்டத்தின் பிரிவு 81ன் படி, ஒரு மக்களவைத் தொகுதி என்பது 6,50,000 முதல் 8,50,000 வாக்காளர்களைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்ததால் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்து பல தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 15 லட்சம் வரை உள்ளது. எனவேதான் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் கூறி வருகின்றன. பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் கூற்றுப்படி நடைபெற உள்ள 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதாகும்.
தென் மாநிங்களுக்கு பாதிப்பு : சர்வதேச அமைதிக்கான கார்னகி அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் 2026ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதி எல்லை மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார் , உத்தபிரதேசம் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு தற்போதைய தொகுதிகளான 80ஐ விடவும் கூடுதலாக 11 தொகுதிகள் சேர்த்து 91 தொகுதிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல பீகாரில் இப்போது உள்ள 40 தொகுதிகளுக்கு பதில் 50 தொகுதிகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா, கர்நாடகா, இமாசலபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்றும், அசாம், மகாராஷ்டிராவில் இப்போதைய தொகுதிகளின் எண்ணிக்கை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் பாஜக வாங்கி வங்கியை தொடர்ந்து தக்க வைத்திருப்பதால் தேர்தல் என்று வரும்போது தென் மாநிலங்களில் கணிசமான தொகுதிகளை இழக்க நேர்ந்தாலும் பாஜகவின் செல்வாக்கு குறையாது என மாநில கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கூற்றுப்படி, "தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்!" என குறிப்பிட்டுள்ளார். மக்களவைத் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 173ல் இருந்து 284 ஆக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
தொகுதி மறுவரையறையில் பாஜக உறுதி : கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டது. அதில் மக்களவைத் தொகுதி எம்பிக்களுக்கான இருக்கைகள் 888 ஆக இருந்தது. வரும் காலத்தில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ளும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு மக்களவைத் தொகுதி எம்பிக்களுக்கான இருக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க : சாதி வாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் - மீண்டும் உறுதிப்படக் கூறிய ஸ்டாலின்!
இதன்பின்னர் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இது குறித்து கருத்துத் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,"2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததும் இரண்டு முக்கிய விஷயங்கள் மேற்கொள்ளப்படும். முதலாவதாக 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். இதனைத் தொடர்ந்து மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்,"என்று கூறினார்.
திமுக எதிர்ப்பு : மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு தொடக்கம் முதலே தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இப்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஒருவேளை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் 8 தொகுதிகளை தமிழகம் இழக்க நேரிடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளக் கூடாது என்பதை தமிழகம் வலியுறுத்தி வருகிறது.
பாஜக ஏன் வரவே கூடாது?
— M.K.Stalin (@mkstalin) April 16, 2024
தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம்.
இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை.
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின்… pic.twitter.com/0T85eKZoEf
இது குறித்து கடந்த ஏப்ரல் 16ஆம் தேதியன்று எக்ஸ் பதிவு ஒன்றில் கருத்துத் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது என்பது தமிழ்நாடு உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம்.மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்? சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா?" என்று கூறியிருந்தார்.
இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் நாடாளுமன்றத் தொகுதிகள் குறைந்தால் ஏன் 16 பிள்ளைகளை பெற்றுக் கொள்ளக்கூடாது என்ற நிலை வந்திருக்கிறது," என்று கூறியிருக்கிறார்.
அதே போல இது பற்றி அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பேசிய சந்திரபாபு நாயுடு, "ஆந்திர பிரதேசத்தில் வயதானவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருப்பதால் அதன் விளைவுகளை மாநிலம் எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. எனவே 2 அல்லது அதற்கு மேல் குழந்தை பெற்றவர்களுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தல்களில் வாய்ப்பு வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்,"என்று தெரிவித்துள்ளார்.
கருணாநிதி சொன்ன தீர்வு : தமிழ்நாட்டின் முதலமைச்சராக கருணாநிதி பதவி வகித்தபோது 1999ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இது தொடர்பாக நடந்த விவாதத்தில் பேசிய கருணாநிதி, "தமிழகத்துக்கு 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஒதுக்கப்பட்ட 39 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படாமல் எல்லைகளை மட்டும் மறுவரையரை செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சருக்கு 02-06-1998ஆம் ஆண்டு கடிதம் எழுதப்பட்டது," என்று சுட்டிக்காட்டி உள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்