சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அஇஅதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், அதிமுக - தேமுதிக உடனான கூட்டணி இறுதிகட்ட பேச்சுவார்த்தைக்காக, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, அதிமுக - தேமுதிக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யபடுவதென முடிவு எட்டபட்டு, அதற்கான ஒப்பந்தத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த ஆகியோர் கையெழுத்திட்டனர். இதன்படி, அதிமுக கூட்டணியில் திருவள்ளூர் (தனித்தொகுதி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர் மற்றும் விருதுநகர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “முதன்முறையாக அதிமுக அலுவலகத்திற்கு வந்துள்ளேன். நான் இந்த சந்திப்பை மகிழ்ச்சியாக பார்க்கிறேன். மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரும் வாழ்ந்த இந்த இடம், ஒரு புரட்சியையும், சகாப்தத்தையும் ஏற்படுத்திய இந்த இடத்திலிருந்து, மறைந்த தேமுதி தலைவர் விஜயகாந்த்தின் ஆசியோடு, அந்த மூன்று தெய்வங்களுக்கும் என்னுடைய மரியாதை கலந்த வணக்கம்.
கடந்த 2011ஆம் ஆண்டு உருவான ஒரு வெற்றிப் பயண கூட்டணி, மீண்டும் இணைந்து தொடங்கியுள்ளோம். அந்த வெற்றி பயணமானது, வரக்கூடிய மக்களவைத் தேர்தலிலும் தொடரும். அது மட்டுமல்லாமல், அடுத்து வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் நிச்சயமாக இந்த கூட்டணி தொடரும்.
வரக்கூடிய மக்களவைத் தேர்தலில், இந்த கூட்டணி நிச்சயமாக மாபெரும் வெற்றி பெறும். நாளை மிக முக்கியமான ஒரு செய்தி, தேமுதிக அலுவலகத்திலிருந்து வெளிவரும். அதிமுக சார்பாக, நாளை அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுகவின் மூத்த தலைவர்கள் அனைவரும் தேமுதிக அலுவலகத்திற்கு வர உள்ளனர். இன்று ஒரு நாள் பொறுத்திருங்கள், நாளை ஒரு முக்கியமான செய்தி வரும்.
அதிமுகவும் சரி, தேமுதிகவும் சரி, நிறைய தேர்தல்களைச் சந்தித்துள்ளோம். அதனால் எத்தனை சவால்கள் வந்தாலும், அத்தனையையும் சந்தித்து வெற்றி பெறுவோம். இங்கு எண்ணிக்கை முக்கியம் கிடையாது. கூட்டணிதான் முக்கியம், அதை பொறுத்திருந்து பாருங்கள். வரலாறு மீண்டும் படைக்கப்படும்.
கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ஒரே கூட்டணியில் இருந்த இரண்டு கட்சிகளும் ஒன்று ஆளும் கட்சியாகவும், மற்றொன்று எதிர்கட்சியாகவும் அமர்ந்து சாதனை படைத்தது போல, இந்த முறை மக்களவைத் தேர்தலிலும் அந்த சாதனை தொடரும்.
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் காரணமாகத்தான், பாஜகவுடன் இந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைக்கவில்லை. அனைவருடைய விருப்பத்திற்கு ஏற்பவே, அதிமுகவோடு இந்த தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளோம். நடக்கவிருப்பது தேர்தல், இங்கே வெற்றி தோல்வியை தீர்மானிப்பது மக்கள்தான். தேர்தல் பிரச்சாரத்தை பொறுத்தவரையிலும் சரி, தேர்தல் அறிக்கையிலும் சரி, தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என்ன தேவையோ அதுதான் இருக்கும்” என கூறினார்.
இதையும் படிங்க: தேனியில் டிடிவி தினகரன் போட்டியா? பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!