சென்னை: இந்திய அரசியலமைப்பு அனைவருக்கும் சம உரிமையை வழங்கும் சட்டப்பிரிவு 14-இல் இருந்து குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு விலக்கு அளித்து, பிரிவு 361-இன் படி அதிகாரம் வழங்குகிறது. இந்த அதிகாரத்தின் படி, உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு எதிராக கேள்வி கேட்கவோ அல்லது தண்டனை விதிக்கவோ முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு பிரதிநிதியாக மாநில அரசுக்கு நியமிக்கப்படும் ஆளுநர்கள், சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு எதிராகவோ, மத்திய அரசுக்கு ஆதரவாகவோ செயல்படக் கூடாது. அவ்வாறு செயல்பட்டால், ஆளுநரை பதவி இழப்பு செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை மட்டுமே வைக்க முடியும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு எதிராகச் செயல்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை விடுவிக்க, தமிழக அரசு தீர்மானம் கொண்டு வந்தது.
ஆனால், மத்திய சிறப்பு புலனாய்வுத்துறை விசாரணை செய்த வழக்கில், மத்திய அரசு மட்டுமே விடுதலை செய்ய அதிகாரம் உள்ளது என்பதால், மாநில அரசின் தீர்மானத்தை, ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருந்தார். உச்ச நீதிமன்ற விடுதலை உத்தரவுக்குப் பின் 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும், ஆன்லைன் சூதாட்டத்தால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதன் எதிரொலியாக, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதும், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்தார். இதுமட்டுமல்லாது, சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க அனுமதி மறுத்துள்ளார்.
இதுபோல, மாநில அரசால் சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்குத் தொடர்ந்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆளுநரின் செயல்பாடு சரியா, மாநில அரசின் பரிந்துரையை ஏற்கவும், நிராகரிக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா மற்றும் ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரப்பிரிவு 361 பற்றியும் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் விளக்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, "மாநில அரசின் பிரதிநியாக மத்திய அரசால் ஆளுநர்கள் நேரடியாக நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக, ஆளுநர்களுக்கு வானளாவிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது.
மாநில அரசின் பிரதிநியாக நியமிக்கப்படும் ஆளுநர், அரசுக்கு எதிராக செயல்படக் கூடாது. அவ்வாறு செயல்படும் ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரப்பிரிவு 361ஐ நீக்க, நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டத் திருத்தத்திற்கு 50 சதவிகித மாநிலங்கள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்.
இப்படியாக, சட்டத் திருத்தம் கொண்டு வராமல், ஆளுநரை நீக்கவோ, ஆளுநர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவோ முடியாது. சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டால், அரசின் தீர்மானங்களுக்கு அனுமதி அளிக்காமல் காலதாமதம் செய்வதாகக் குற்ற நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கலாம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ஆளுநர் டூ அக்கா" - மீண்டும் பாஜகவில் இணைந்தார் தமிழிசை செளந்தரராஜன்!