கோயம்புத்தூர்: 18வது நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதி சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், கட்சிகள் கூட்டணியை உறுதி செய்தவுடன், அரசியல் கட்சியின் தலைவர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு தலைவர்கள் பிரச்சாரம் செய்ய சொகுசு வாகனங்களை பயன்படுத்துவார்கள். ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுக்கு சவுகரியமான பிரச்சார வாகனங்களை, தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைத்துக் கொள்கின்றனர். பிரச்சாரங்களின் போது அரசியல் கட்சித் தலைவர்கள் பயன்படுத்தும் வாகனங்களும் மக்களின் கவனத்தைப் பெறும். இதற்கான பிரத்யேகமான வாகனங்கள் கோவையில் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இது போன்ற பிரச்சார வாகனங்கள் தயார் செய்யப்பட்ட போதிலும், கோவையில் தயார் செய்யப்படும் பிரச்சார வாகனங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் விரும்பும் வகையில் பல்வேறு வசதிகள் கொண்டவையாக உள்ளது. இதனால் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் இங்கு பிரச்சார வாகனங்கள் தயார் செய்யப்படுகின்றன.
இது குறித்து பிரச்சார வாகனங்கள் தயார் செய்யும் கொயாஸ் (koyas) நிறுவனத்தின் உரிமையாளர் ரியாஸ் கூறுகையில், “தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்டோர்களின் தேர்தல் பிரச்சார வாகனங்கள் கோவையில்தான் தயார் செய்யப்பட்டன. இங்கு தயார் செய்யப்படும் பிரச்சார வாகனங்களில் சுழலும் இருக்கைகள், ஓய்வு எடுக்கும் வசதிகள், படுக்கை மற்றும் கழிப்பறை வசதிகள் என பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக, தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய ஹைட்ராலிக் இருக்கைகள் பொருத்தப்படுகின்றன.
இதன் மூலம் தலைவர்கள் இருக்கையில் இருந்தவாறே ஹைட்ராலிக் லிப்டிங் முறையில் வாகனத்தின் நடுவே தூக்கப்பட்டு பொதுமக்கள், தொண்டர்களை பார்த்தபடி பேசலாம். மேலும், வேனில் பயணிக்கும்போது தலைவர்களின் முகங்கள் தொண்டர்களுக்கு தெளிவாக தெரிய வசதியாக, அவர்கள் அமரும் இருக்கைக்கு முன் பிரத்யேக விளக்குகள் பொருத்தப்படுகின்றன.
முக்கிய தலைவர்கள் வேனில் செல்லும் போது, அவர்களுடன் பாதுகாவலர்கள் பிடித்துக்கொள்ள ஏதுவாக கைப்பிடிகளுடன் நிற்கக்கூடிய வசதிகளும் அமைக்கப்படுகின்றன. இதில் 10 பாதுகாப்பு அதிகாரிகள் வரை நின்று கொண்டு, தங்களது பணியினை செய்ய முடியும். மேலும், தலைவர்கள் பேசுவதை தொண்டர்கள் கேட்க வசதியாக, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சவுண்ட் சிஸ்டங்களுடன் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
அதுபோல் தலைவர்கள், தங்களது கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் வகையில் ஷோபாக்களும் அமைக்கப்படுகின்றன. முன் இருக்கையில் அமர்ந்து இருக்கும் தலைவர், தனது இருக்கையில் அமர்ந்தபடி வாகனத்தின் உள்ளே செல்லும் வசதியும் செய்து கொடுக்கிறோம். நீண்ட தூரம் பயணம் செய்தாலும் உடல்சோர்வு ஏற்படாத வகையில் இந்த பிரச்சார வாகனங்கள் வடிவமைக்கப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.