சென்னை: 40 வயது மேற்பட்டவர்களில் 10 பேரில் எட்டு பேருக்கு முதுகுத் தண்டுவடப் பிரச்சனை வருகிறது என் சென்னை காவேரி மருத்துவமனையின் ஸ்பைன் இன்ஸ்டியூட் தலைமை மருத்துவர் பாலமுரளி ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
முதுகு வலி வரக் காரணம்?: நடப்பது, குனிவது, அமர்வது என நாம் அன்றாடம் செய்யக் கூடிய செயல்கள் தான் முதுகு தண்டுவடத்தில் நாள்பட கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்புகள் ஏற்படுத்துகிறது என்றார். பள்ளி குழந்தைகளை பொருத்தவரை அவர்கள் சுமந்து செல்லும் புத்தகப் பையும் முதுகு தண்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், குழந்தைகள் விளையாடும் போது ஏற்படும் காயங்களாலும் முதுகில் பாதிப்பை ஏற்படுகிறது.
சிலர் ரொம்ப நேரம் அமர்ந்து கொண்டும், கட்டிடப் பணி மேற்கொள்பவர்களும் அதிகளவு சுமையை தூக்கியும் வேலை செய்கின்றனர். இவை அனைத்தும் முதுகு தண்டுவட பிரச்சனைக்கு காரணமாகும். முதுகில் தண்டுவடத்தில் வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும் என்றார்.
மனநிலையை பாதிக்கும்: முதுகு தண்டுவட பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்தால் படுத்த படுக்கையாக ஆகிவிடுவோம், வேலை செய்ய முடியாது போன்ற தவறான கண்ணோட்டமும் இருக்கிறது. முதுகு வலி ஏற்படுபவர்கள் உடல் அளவில் ஏற்படும் வலியை விட மனதளவில் பாதிக்கப்படுகின்றனர் என்கிறார் மருத்துவர்.
குழந்தைகளுடன் விளையாடுவது, 3 மணி நேர சினிமா பார்ப்பது,டிராவல் செய்வது என பிடித்த விஷயங்களை செய்ய முடியாமல் போகும் போது கோபம்,மன அழுத்தம் ஏற்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் முதுகு வலியால் பொருளாதார இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் எடை தூக்கி முதுகு வலி வந்தால் அந்த நிறுவனத்தின் மீது நஷ்ட ஈடு கேட்க முடியும்.
பாதுகாப்பது எப்படி?: முப்பது வயதிற்குள் முதுகு தண்டுவடத்தை நன்றாக பார்த்துக் கொண்டால் பின்னர் 40 வருடம் வலியின்றி இருக்கலாம். முதல் 40 ஆண்டுகள் வேலை செய்வதாக ஓடி முதுகுத்தண்டு இடத்தில் பாதிப்பு ஏற்பட்டால் பின்னர் வரும் காலங்கள் வலி நிறைந்ததாக இருக்கும். பள்ளி மாணவர்கள் அதிக எடை கொண்ட பைகளை தூக்கி செல்வதை தவிர்க்க வேண்டும்.
சமையலறையில் சிங்க் மற்றும் சமைக்கும் திண்டு பகுதியை உயரத்திற்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும். குனிந்து பாத்திரம் கழுவுவது, அதிக எடை கொண்ட பாத்திரங்களை தூக்குவதை தவிர்க்க வேண்டும்.
IT வேலை செய்பவர்கள் நிலை?: தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்கள் உட்கார்ந்து கொண்டு தான் வேலை செய்ய வேண்டும். பத்து மணி நேரம் வேலை என்றால் பணிக்கு செல்லவும் வருவதற்கும் என நான்கு மணி நேரம் பேருந்தில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. 14 மணி நேரம் அமர்ந்து கொண்டே இருப்பார்கள். மனிதர்கள் உட்கார்ந்து கொண்டு இருப்பது புகைப்பிடிப்பதனால் ஏற்படும் பாதிப்பை விட அதிகம் என்றார்.
என்ன செய்வது?:
- பணியின் இடையே கொஞ்சம் நடப்பது
- கம்ப்யூட்டர், செல்போனை கண் பார்வைக்கு நேராக வைக்க வேண்டும்
- உட்காரும்போது நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும்
செல்போனை குனிந்த பார்த்துக் கொண்டே இருப்பதால் முதுகு தண்டுவடம் வலையும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், செல்போன் பார்த்து கொண்டிருப்பதால் கழுத்து அமைப்பு மாறும் அபாயம் ஏற்படுகிறது.
தீர்வு என்ன?:
- நாம் குளிப்பது தொடங்கி ஒவ்வொரு வேலையை செய்யும் பொழுதும் எவ்வாறு முதுகு தண்டுவடத்திற்கு அழுத்தம் கொடுக்காமல் செய்யலாம் என்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன அதனை பிசியோதெரபிஸ்டிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.
- உடற்பயிற்சி செய்ய வேண்டும்
- தொப்பையும் முதுகு தண்டு வடம் சுமப்பதால் உடல் பருமனை குறைக்க வேண்டும்
- வாகனங்களில் செல்லும் பொழுதும் சாலையில் குண்டும் குழியுமாக இருந்தாலும் பார்த்து மெதுவாக செல்ல வேண்டும்
தினமும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது எனவே அதனை உடற்பயிற்சி போன்றவை செய்து வலுவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: தவறான அளவு Bra அணிவதால் இடுப்பு, முதுகு வலி பிரச்சனை...எச்சரிக்கை பெண்களே!
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்