திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் உள்ள கராத்தே செல்வின் நாடார் மனைவியும், காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் நிறுவனருமான வயோலா செல்வினின் இல்லத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “இதுவரை திராவிட கழகங்களுக்கு ஆதரவு அளித்தோம். அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றவில்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கான பல்வேறு நன்மைகளைச் செய்து வருகிறது.
திராவிட ஆட்சியில் மதுவை ஒழிப்போம் என தெரிவித்தார்கள், ஆனால் இதுவரை செயல்படுத்தவில்லை. ஆனால் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும்போது, மதுக் கடைகளை ஒழிப்போம், கள்ளுக்கடைகளைத் திறப்போம் என்று தெரிவித்தார். கள் குடித்தால் உடலுக்கு நன்மை.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், இளைஞர்கள் பெரும்பாலானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். எனவே, இந்த முறை பாரதிய ஜனதா கட்சிக்கு எங்களது காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் ஆதரவு தெரிவிக்கிறோம். நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எனது முழு ஆதரவு தெரிவிக்கிறேன்.
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய அனைத்து வேட்பாளர்களுக்கும் எங்கள் ஆதரவை தெரிவிக்கிறோம்” என தெரிவித்தார்.