திருச்சி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ அறிமுகம் மற்றும் செயல்வீரர் கூட்டம் இன்று (மார்ச் 24) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக முதன்மைச் செயலாளரரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமை தாங்கினார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக கூட்டணிக் கட்சி தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் துரை வைகோ, “அரசியலுக்கு வருவதற்கு துளி கூடம் எனக்கு விருப்பம் இல்லை.
அனைவருக்கும் சந்தர்ப்ப சூழ்நிலை ஒன்றுதான் காரணமாக அமையும். இறப்பு என்பது மனிதர்களாக பிறந்தவர்களுக்கு அனைவருக்கும் நடக்கக்கூடிய ஒன்றுதான். எனது அப்பா வைகோ, கடந்த ஓராண்டுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
அப்போது, அடுத்து கட்சியை யார் வழிநடத்துவது என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. அப்போது, மதிமுக தொண்டர்கள் அனைவரும் என்னை தேர்வு செய்தார்கள். எனக்கு அரசியலுக்கு வர விருப்பமில்லை, கட்சியில் முக்கிய மூத்த நிர்வாகிகள் பலர் உள்ளனர், அவர்கள் கட்சியை வழிநடத்த வேண்டும் என நான் கூறினேன்.
ஆனால், அதற்கு யாரும் ஒத்துழைக்கவில்லை. என் அப்பா வைகோ ஒரு சகாப்தம். என் அப்பா வைகோவிற்கு பிறகு, அவர் ஓடி ஓடி உழைத்து வளர்த்த கட்சி அழிந்து விடக்கூடாது என்பதற்காக, நான் அரசியலுக்கு வந்தேன். என்னை கட்டாயப்படுத்தி, வலுக்கட்டாயமாக அரசியலுக்கு வரவழைத்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
மேலும், என் அப்பாவிற்கு தலைகுனிவு வரக்கூடாது என்பதற்காக, விருப்பமே இல்லாமல் அரசியலுக்கு வந்தேன். எங்களை புண்படுத்தாதீர்கள், எங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்றாலும், தொடர்ந்து திமுகவுடன் பயணித்திருப்போம். எங்களுடைய நோக்கம், தமிழ்நாட்டில் மதவாத கட்சியான பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பது மட்டுமே” என கூறினார்.
தொடர்ந்து, அவர் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, திமுகவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் எந்த சின்னத்தில் போட்டியிட போகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். நான் சுயமரியாதைக்காரன். மீண்டும் எங்களை புண்படுத்தாதீர்கள். நாங்கள் சிறிய கட்சி தான்.
இந்த தேர்தலில் கூட எனக்காக நான் வாய்ப்புகள் கேட்கவில்லை, என் கட்சியில் இருக்கக்கூடிய சில நபர்களுக்காக வாய்ப்பு கேட்டேன். ஆனால், அனைவரும் என்னை நிறுத்தி விட்டார்கள். வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்திருந்தாலும் நாங்கள் உங்களுடன் இணைந்து பயணித்திருப்போம்” என பேசினார்.
இதையும் படிங்க: “நான் யாருக்கும் குருவும் இல்லை, எனக்கு யாரும் சிஷ்யனும் இல்லை” - டிடிவி தினகரன் பேச்சு! - TTV Dhinakaran