தஞ்சாவூர்: திருவலஞ்சுழி பெட்ரோல் பங்கில் பெட்ரோலோடு தண்ணீர் கலந்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அங்கு பெட்ரோல் போட்ட வாகன ஓட்டிகளின் வாகனங்கள் பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தங்களுக்கு உரிய பதில் அளிக்காமல் பெட்ரோல் பங்க் நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக வாகன ஓட்டிகள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து சுவாமிமலை போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில், சுவாமிமலை காவல் சரகத்திற்குட்பட்ட திருவலஞ்சுழியில் உள்ள பெட்ரோல் பங்கில் இன்று இருசக்கர வாகன ஓட்டிகள் ஸ்பீடு பெட்ரோல் நிரப்பி கொண்டு இருந்துள்ளனர். அதில், பெட்ரோலுடன் பெரும் அளவு தண்ணீர் கலந்து வருவதைக் கண்டு வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளன. இதனையடுத்து, வாகனம் இயக்க முடியாமல் பழுதாகி நின்றுள்ளது.
பின்னர், இதுகுறித்து பெட்ரோல் பங்க் நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுவாமிமலை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்பீடு பெட்ரோல் லோடு நேற்றிரவு வந்துள்ளது. பெட்ரோல் வரும்போதே தண்ணீர் கலந்து வந்துள்ளதா? அல்லது பங்கில் உள்ள இருப்பு டேங்கில் பழுது ஏற்பட்டு அதன்வழியாக டேங்கிற்குள் தண்ணீர் புகுந்ததா? என்பது தெரியவில்லை. தகுந்த ஆய்விற்கு பிறகே தெரியவரும். தொடர்ந்து, இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், இப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் கூறுகையில், “இந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வருகிறது. இதனால், 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் இங்கு நிற்கின்றன. பெட்ரோல் பங்க் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் முறையாக பதில் அளிப்பதில்லை. பெட்ரோல் இல்லாததால் வேலைக்கு செல்ல முடியாமல் இங்கே நிற்க வேண்டிய சூழல் உள்ளது” என்றனர்.
இந்நிலையில், இது குறித்து பேட்டியளிக்க மறுத்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் மகன் பிரேம்குமார் கூறுகையில், “பெட்ரோலில் தண்ணீர் எதுவும் கலக்கவில்லை. இது குறித்து உயர் அலுவலர்களுக்கு தகவல் அளித்துள்ளோம். அவர்கள் ஸ்பீடு பெட்ரோலில் எத்தனால் கலப்பு அதிகம் இருந்தாலும் இப்படி வர வாய்ப்புள்ளது என்றும், சில மணி நேரத்தில் இது தானாகவே சரியாகும் என்றும் தெரிவித்தனர்” இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கட்சியில் சேர்ந்து 6 மாசமாச்சு.. அண்ணே சரிதானே? - மேடையில் ஓப்பனாக பதவி குறித்து பேசிய விஜயதாரணி!