சென்னை/திருவள்ளூர்: சென்னைக்கு குடிநீர் தரும் செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட நீர் தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
வங்க கடலில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டிருப்பதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் படிப்பு பகுதிகளான சென்னை புறநகர் பகுதிகளில் கனமழைபெய்ததால் ஏரிக்கும் வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.
ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 2368 மில்லியன் கன அடி உள்ளது. அதாவது 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் இப்போது 19.02 அடி வரை தண்ணீர் நிரம்பி இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீர் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள்தொடர்ந்து கண்காணித்தபடி இருக்கின்றனர். முழு கொள்ளளவை எட்டும் முன்பு ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
இதையும் படிங்க: கனமழையால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு.... கரையோர மக்கள் அச்சம்!
இதே போல திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு உயர்ந்து வருகிறது. இதனால் தண்ணீர் நிறைந்துள்ள நீர் தேக்கத்தை பார்க்க மக்கள் திரண்டு வருகின்றனர். தொடர் கனமழை பெய்து வருவதால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு காலை 460 கனாடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து தற்போது 780 கண அடியாக அதிகரித்துள்ளது. நீர்த்தேக்கத்திலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 100 கன அடி விதமும் குடிநீர் வடிகல் வாரியத்திற்கு 17 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் 3231 மில்லியன் கன அடியில் தற்போது 560 மில்லியன் கன அடியில் நீர் இருப்பு உள்ளது. 35 அடி உயரத்தில் 22. 5 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்க பகுதியில் 24 மணி நேரமாக மாநில பேரிட மீட்பு குழுவினர் மற்றும் நீர்வளத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் மேற்கொண்டு வருகின்றனர். பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்க பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக பாதுகாப்பு கருதி பொதுமக்கள் செல்வதற்கு நீர்வளத்துறை தடை விதித்துள்ளது.நீர்தேக்க பகுதியில் நீர் இருப்பு 17 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளது. அதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு கூடுதலாக நீர் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.