தேனி: 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாளை (ஏப்.19) நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் சாலை வசதிகள் இல்லாத மலைக்கிராமங்களில் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகாவுக்கு உட்பட்ட குரங்கணி மலைக் கிராமத்தில் இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள டாப் ஸ்டேஷன், முதுவாக்குடி, சென்ட்ரல் போன்ற பகுதிகளுக்கு சாலை வசதிகள் இல்லாததால், கோவேறு கழுதைகள் மூலம் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சுமார் 500க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின குடும்பங்கள் வசித்து வரும் ஊரணி, ஊத்துக்காடு போன்ற பகுதிகளுக்கும் குதிரை மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகாரணங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. ஒவ்வொரு தேர்தலுக்கும் குரங்கணியில் இருந்து டாப் ஸ்டேஷன், முதுவாக்குடி, சென்ட்ரல் போன்ற பகுதிகளுக்கு குதிரைகள் மற்றும் கோவேறு கழுதைகள் மூலம் வாக்குப் பெட்டிகள், வாக்குப்பதிவிற்கான உபகரணங்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
நாளை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இப்பகுதியில் வசித்து வரும் மலைக்கிராம மக்கள் மற்றும் ஆதிப் பழங்குடியின மக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக, குரங்கணியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவு வரை வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குப்பதிவிற்கான உபகரணங்கள் குதிரைகளில் கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் இவிஎம் இயந்திரம் மற்றும் வாக்குப்பதிவுக்கான உபகரணங்கள் மலைக்கிராமங்களுக்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியது. குரங்கணி வரை வாகனங்களில் கொண்டு செல்லப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பின்பு அங்கிருந்து குதிரை மூலம் கொண்டு செல்லப்படுகிறது.