தருமபுரி: தமிழ்நாட்டில் தேர்தல் என்றாலே தருமபுரி மாவட்டத்தில், கழுதையில் வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் காட்சி தேர்தல் தவறாமல் கிடைப்பது தான். ஆனால் இந்த ஆண்டு கழுதைகள் மூலம் போக்குவரத்து நடந்த மலைப்பாதையில் மண் சாலை அமைக்கப்பட்டு டிராக்டர் மூலம் போக்குவரத்து நடைபெற்றது.
பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட கோட்டூர் மலை, ஏரிமலை, அலகட்டு உள்ளிட்ட 3 மலை கிராமங்களில், 1086 வாக்காளர்கள் நாளை நடைபெற உள்ள தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். மலை அடிவாரத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் கரடு முரடான மண் சாலையில், காவல்துறை பாதுகாப்புடன், வருவாய்த் துறையினரின் நேரடி பார்வையில், வாக்குசாவடி இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாக்கு சாவடி அலுவலர்கள் மற்றும் காவல் துறையினரால் டிராக்டரில் வைத்து எடுத்து செல்லப்பட்டன.
இந்தப் பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் இருந்து வந்த நிலையில், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எந்த ஒரு அத்தியாவசிய தேவைகளுக்கும் செங்குத்தான மலைப் பாதையில் நடந்தே சென்று வந்துள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாலை வாகனங்கள் சென்று வரும் அளவுக்கு மண்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவரிடம் பேசிய போது, "தேர்தல் நடக்கும் போது தங்கள் ஊர் கவனிக்கப்பட்டாலும், அன்றாடம் தங்களின் போக்குவரத்தே இப்படித் தான் நடைபெற்றது என கூறினர்.
மருத்துவம், உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு மலையிலிருந்து கீழே வர நடப்பதைத் தவிர வேறு வழி இருந்ததில்லை என கூறும் அவர்கள் தற்போது மண்சாலை அமைக்கப்பட்டுள்ளதால், டிராக்டர் , ஜீப் போன்ற வாகனங்கள் இயங்க முடிகிறது என கூறினர். இதனை தார்ச்சாலையாக மாற்றினால் தங்களுக்கும் வெளியுலகத் தொடர்பு எளிதாகும்" என்றும் அவர்கள் கூறினர். சாலை அமைத்துத் தராதால் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலையும் இப்பகுதி மக்கள் புறக்கணித்தது குறிப்பிடத் தக்கது.