கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் இந்த நிலையில் 100% வாக்குப் பதிவினை சாத்தியப்படுத்தும் முயற்சியில் 85 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களின் வீடுகளுக்கு வாக்குச் சீட்டு மற்றும் பெட்டியுடன் சென்று தபால் வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதற்காகப் படிவம் 12டி (12D) வழங்கப்பட்டு விபரங்களைப் பூர்த்தி செய்து பெற்றுக் கொண்டனர். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மொத்தம் 14 ஆயிரத்து 207 பேர் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களாக உள்ளனர். இதில் சட்டமன்றத் தொகுதி வாரியாக கன்னியாகுமரியில் 3831 வாக்காளர்களும், நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் 2709 வாக்காளர்களும், குளச்சல் தொகுதியில் 2077 வாக்காளர்களும், பத்மநாபபுரம் தொகுதியில் 2438 வாக்காளர்களும், விளவங்கோடு தொகுதியில் 1651 வாக்காளர்களும், கிள்ளியூர் தொகுதியில் 1501 வாக்காளர்களும் உள்ளனர்.
படிவம் 12டி வழங்கப்பட்ட தகுதியான வாக்காளர்களில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்களின் சட்டமன்றத் தொகுதி வாரியாக தகுதி பெற்ற வாக்காளர்கள் கன்னியாகுமரி தொகுதியில் 1343 வாக்காளர்கள், நாகர்கோவில் தொகுதியில் 559 வாக்காளர்கள், குளச்சல் தொகுதியில் 448 வாக்காளர்கள், பத்மநாபபுரம் தொகுதியில் 849 வாக்காளர்கள், விளவங்கோடு தொகுதியில் 510 வாக்காளர்கள், கிள்ளியூர் தொகுதியில் 273 என மொத்தம் 3982 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைத் தபால் வாக்குகளாகப் பதிவு செய்ய உள்ளார்கள்.
மாற்றுத்திறனாளி வாக்காளர்களில் கன்னியாகுமரி தொகுதியில் 725 வாக்காளர்கள், நாகர்கோவில் தொகுதியில் 293 வாக்காளர்கள், குளச்சல் தொகுதிகள் 388 வாக்காளர்கள், பத்மநாபபுரம் தொகுதியில் 548 வாக்காளர்கள், விளவங்கோடு தொகுதியில் 335 வாக்காளர்கள், கிளியூர் தொகுதியில் 257 வாக்காளர்கள் என மொத்தம் 2546 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைத் தபால் வாக்குகளாகப் பதிவு செய்ய உள்ளனர். இந்த வாக்காளர்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்று தபால் வாக்கு பெற 119 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுக்கள் இன்று காலை முதல் வாக்காளர்களின் வீடு தேடிச் சென்று வாக்குகளைப் பெற்று வருகின்றனர். வாக்குப்பதிவு இயந்திரத்திற்குப் பதிலாக வாக்கு பெட்டி எடுத்துச் செல்லப்படுகிறது. காவல்துறை அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர், மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோர் உடன் செல்கின்றனர்.
வாக்குப்பதிவு நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு முன்னதாக நடவடிக்கைகள் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டு அதன் பின்னர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்றும், நாளையும் மற்றும் விடுபட்டவர்களுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி ஆகிய நாட்களில் தபால் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு செய்பவரும் குழுவில் வருகையின் போது வாக்காளர் வீட்டில் இல்லையெனில் முன்கூட்டியே தகவல் அளித்து இரண்டாம் முறையும் இக்குழு வருகை தரும். இரண்டாவது வருகையின் போதும் வாக்காளர் வீட்டில் இல்லையெனில் வாக்குப்பதிவு குழு மீண்டும் வருகை தர மாட்டார்கள். மேலும் அஞ்சல் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குகளை விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட பாலவிளை, குழித்துறை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தபால் வாக்குப்பதிவு பெட்டிகளுடன் முதியவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தபால் வாக்குகளைப் பதிவு செய்தனர். இதில் முதியவர்கள் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
மற்ற தொகுதிகளில் தபால் வாக்குப்பதிவில் ஒரு வாக்கு செலுத்தும் நிலையில் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி மக்கள் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குகளைச் சேர்த்து இரண்டு வாக்குகளைப் பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: "பிடிபட்ட 4 கோடி என்னுடைய பணம்" - ஒப்புக்கொண்ட நடிகர் மன்சூர் அலிகான்! - Lok Sabha Election 2024