தூத்துக்குடி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வமாக வாக்களித்து வந்தனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி கோவில்பட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் 212-ல் வாக்களிப்பதற்காக, கோவில்பட்டி செக்கடி தெருவைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் வடிவேல் ராஜா (40) என்பவர் வந்துள்ளார். அப்போது, தேர்தல் அலுவலர்கள் வடிவேல் ராஜாவின் வாக்கு முன்னதாக செலுத்தப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வடிவேல் ராஜா, தான் இப்போதுதான் வாக்களிக்க வந்துள்ளேன் என்று, தனது பேருந்து பயணச்சீட்டைக் காட்டியுள்ளார். ஆனால், அவரது வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதால், தேர்தல் அதிகாரிகள் வாக்களிப்பதற்கு அனுமதி மறுத்துள்ளனர். இதனால், வாக்குச்சாவடியிலிருந்து விரக்தியுடன் வடிவேல் ராஜா வெளியேறியுள்ளார்.
பின்னர், மீண்டும் வாக்குச்சாவடிக்கு வந்த வடிவேல் ராஜா, தேர்தல் அதிகாரிகளிடம் தனது வாக்குரிமையைச் செலுத்த அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். கோரிக்கையின் அடிப்படையில், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் விதிமுறைகளின் படி, வாக்குச்சீட்டைப் பயன்படுத்தி டெண்டர் வாக்கு முறையில் (tendered vote) ஆய்வுக்குரிய வாக்கினை பதிவு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கு வடிவேல் ராஜா சம்மதம் தெரிவித்ததன் அடிப்படையில், அவரது வாக்குரிமை ஆவணங்கள் சர்பார்க்கப்பட்டு, வாக்குச்சீட்டு முறையில், ரப்பர் முத்திரையினைப் பயன்படுத்தி தனது வாக்கினைச் செலுத்தியுள்ளார். பின்னர், அந்த வாக்குச் சீட்டினை வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் ஒப்படைத்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் புகைப்படம் தெளிவாக இல்லாத காரணத்தினால், இதுபோன்ற தவறுகள் நடைபெற்றதாக பணியில் இருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர். உண்மையான வாக்காளருக்குப் பதிலாக வேறொரு நபர் வாக்களித்ததன் காரணமாக வாக்குச்சாவடியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இந்தியில் பெயர்.. முகவர்கள் மறுத்த விவகாரத்தில் நடந்தது என்ன? - Lok Sabha Election 2024