ஈரோடு : இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் வனப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரியவகை பறவை இனங்கள் உள்ளன. இவற்றில் பாறு கழுகுகள் மிக முக்கியமானவை. இந்தியாவில் ஒன்பது வகை பாறு கழுகுகள் உள்ளன. இதில், தமிழகத்தில் வெண் முதுகு பாறு கழுகு, கருங்கழுத்து பாறு கழுகு, செம்முகப் பாறு கழுகு ஆகிய 3 வகைகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் மாயாற்று சமவெளியில் காணப்படுகின்றன.
அண்மைக் காலமாக, பாறு கழுகுகள் புதிய இடங்களில் தென்பட ஆரம்பித்துள்ளன. சத்தியமங்கலம் நகரத்திற்கு அருகிலேயே புதுவடவள்ளி மற்றும் டி.என்.பாளையத்திலும் அண்மையில் தென்படுவதால் கழுகுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. எண்ணிக்கை உயர்ந்து வருவதால் இவற்றை பாதுகாப்பதில் வனத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
கழுகுகளின் எண்ணிக்கை குறைய காரணம் : ’டைக்குளோபினாக்’ எனும் கால்நடை மருந்து தான், இந்தியாவில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை குறைவுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. ‘டைக்குளோபினாக்’ மருந்தை சாப்பிட்ட கால்நடைகள், இறந்த பின்பும் அதன் உடலில் இந்த மருந்து தங்கிவிடுவதால் இந்த கால்நடைகளை சாப்பிடும் கழுகுகள் இறந்துவிடுவதாக கூறப்படுகின்றன.
இந்த மருந்து கடந்த 1990 ஆம் ஆண்டு தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கி 99 சதவீத கழுகு இனங்கள் அழிந்த தருவாயில், மருந்தை பயன்படுத்த அரசு தடை விதித்ததால் கழுகுகள் இறப்பு எண்ணிக்கை குறைந்தன.
இதனை தொடர்ந்து பாறு கழுகுகளை பாதுகாக்க கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம், முதல் சனிக்கிழமை சர்வதேச பாறு கழுகுகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்நாளில் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களிலும், நகர் பகுதிகளிலும் பாறு கழுகுகளின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், இன்று பாறு கழுகுகளை பாதுகாக்கவும், டைக்குளோபினாக் மருந்துகளால் கழுகுகள் உயிரிழந்து விடுவதை தடுப்பதற்கு மருந்துக்கடை விற்பனையாளர்களிடம் தன்னார்வ அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பாறு கழுகுகளால் ஏற்படும் நன்மை, அழிவுக்கான காரணம், இவற்றை அழிவிலிருந்து மீட்பது இதில் மருந்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு குறித்து வனத்துறையினர் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். திம்பம் - மைசூர் சாலையில் பல விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு தரப்பினரும் இணைந்து வேலை செய்தால்தான் இவற்றைக் காப்பாற்ற முடியும் என தன்னார்வ அமைப்புகள் தெரிவிக்கின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : நியூயார்க் நகரம் சென்றடைந்த நீலகிரி யானைகள்..பழங்குடியினர் கைவண்ணத்துக்கு உலகளவில் மவுசு! - Nilgiris elephant in New York