விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலுள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், சிவகாசி காங்கிரஸ் எம்எல்ஏ அரசன் அசோகன், இஎஸ்ஐ மருத்துவமனையின் இணை இயக்குநர் டாக்டர்.அசோகன் தலைமையிலான மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு, மருத்துவமனை மேம்பாட்டிற்காக மருத்துவ உபகரணங்கள் மத்திய அரசின் நிதியிலிருந்து பெறுவது பற்றி ஆலோசித்து, அதற்குரிய நிதியை வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு பரிந்துரைக்க முடிவெடுக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி மாணிக்கம் தாகூர், "மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சிவகாசி இஎஸ்ஐ மருத்துவமனையின் தரம் மிகக்குறைந்த அளவில் உள்ளது. அரசு மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையை தொடர்ந்து மத்திய அரசு வஞ்சித்து வரும் பார்வை மாற வேண்டும்.
சிவகாசி இஎஸ்ஐ மருத்துவமனையின் தரம் உயர்த்தப்பட வேண்டுமென வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் முதலமைச்சரின் நேரடி பார்வையிலுள்ள காவல் துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல் காவல்துறையின் பணி சிறப்பாக உள்ளது.
இருந்த போதிலும், தமிழக காவல் துறையை மென்மேலும் மேம்படுத்த வேண்டுமென்பதை வலியுறுத்துவோம். எந்த ஒரு முதலமைச்சரின் வெளிநாட்டு பயணமும் அந்தந்த மாநிலங்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு முதலீட்டு பயணம் தென் மாவட்டங்களை புறக்கணிக்காமல் தொழில்களை பெற்றுத் தர வேண்டும்.
இதையும் படிங்க : “நான் ஜிலேபி சாப்பிடவில்லை..” அன்னபூர்ணா விவகாரத்தில் வானதி சீனிவாசன் விளக்கம்! - annapoorna owner apologizes issue
ஜிஎஸ்டி விவகாரம் : ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்தது ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட மத்திய அரசின் அகங்காரத்தின் அடுத்த நிலை. இந்த செயல்பாடு இந்தியா முழுவதும் உள்ள ஜிஎஸ்டி வரி கட்டும் தொழில் முனைவோர்களை மிரட்டுவதற்கான ஆதாரமாகவே கருதுகிறோம்.
பெரிய - நடுத்தர அளவிலான தொழில் செய்பவர்களை மிரட்டும் மத்திய அரசு, அதானி- அம்பானி தவிர மற்றுமுள்ள தொழில் முனைவோர்களை மத்திய அரசு மிரட்டி வருவது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜிஎஸ்டி பற்றி கேள்வி எழுப்பியவர்களை மிரட்டுவது மத்திய அரசின் அயோக்கியத்தனத்தின் உச்சகட்டமாகும்.
Is this fair, Madam Finance Minister? When will you stop forcing businessmen to apologize for expressing their grievances in a way that the media amplifies?
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) September 13, 2024
Arrogance always has an expiration date.#StopHarrasingBusinessMen
pic.twitter.com/nADXb8YCDG
இதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்க வேண்டும். இந்த பிரச்சனை பற்றி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தவுள்ள மது ஒழிப்பு மாநாட்டை அரசியலாக்குவது தவறானது. மதவாத, சாதிவாரி கட்சிகள் தவிர மற்ற அனைவருக்கும் மாநாட்டில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
நாடு முழுவதும் மதவாதத்தை அனைவரும் எதிர்த்து, இந்திய வெறுப்பு அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தற்போது தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் மதுவிலக்கு பற்றி சிந்திப்பது அவசியமான ஒன்று.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சமயத்தில் பட்டாசு தொழில் நஷ்டமடையாமல் பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் அனைத்து மாநில அரசுகளும் அனுமதியளிக்க வேண்டும். பட்டாசு தொழில் என்றாலும், வந்தே பாரத் ரயில் நிற்பதாகட்டும், மத்திய அரசு விருதுநகர் மாவட்டத்தை வஞ்சிக்கிறது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக பட்டாசு தொழிலுக்கான தனிச்சட்டம் இயற்றப்படுமென எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான முன்வரைவு வழங்கப்பட்டுள்ளது. பட்டாசு தொழிலையும், தொழிலாளர்கள் நலனையும் பாதுகாக்கும் விதமாக புதிய தனிச்சட்டம் இருக்க வேண்டும்.
பட்டாசு தொழிலை பழிவாங்கும் விதமாகவோ, பட்டாசு தொழிலை அழிக்கும் விதமாக புதிய சட்டம் இருக்கக் கூடாது. பட்டாசு தொழிற்சாலை பிரச்னை குறித்து நாக்பூரிலுள்ள தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகத்திற்கு எடுத்து செல்லாமல், சிவகாசியிலுள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகத்தின் மூலமாகவே உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துவோம்" என்றார்.