திருவண்ணாமலை: செங்கம் அடுத்த மேல்செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ஜெகதீஷ். இவருக்கு மனைவி மற்றும் 1-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளனர். இந்நிலையில், மனைவி தாய் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், தனது மகனுடன் ஜெகதீஷ் பொழுதை கழித்து வந்துள்ளார்.
அப்போது தன் மகன் எதிரிலேயே 'நான் சாகப் போறேன்டா.. இதை வீடியோ எடுக்கலாம்' என செல்போனை ஆன் செய்து வைத்து விட்டு, தன் மகனுடன் பேச்சுவார்த்தை கொடுத்துக் கொண்டே படுக்கை அறையில் இருந்த மின்விசிறியில் ஜெகதீஷ் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
அப்போது, தற்கொலைக்கு முயற்சித்த சில நொடியிலேயே ஜெகதீஷ் உயிரிழந்தார். தந்தை விளையாட்டாக தான் நடிக்கிறார் என அப்பாவியாக பார்த்துக் கொண்டிருந்த மகன், அசைவற்றுக் கிடந்த தந்தைக்கு மூச்சு இருக்கிறதா என கை வைத்து பார்த்து காப்பாற்ற முயற்சிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், ஜெகதீஷ் தற்கொலை செய்ய காரணம் என்ன என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற மகன் முன்னே தந்தை உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் மேல்செங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே போல, தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள யூடியூபர் பிரியாணி மேன் நேரலையில் தற்கொலை முயற்சி செய்த சம்பவமும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்