சென்னை: வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி அருகே உள்ள எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் போதை தலைக்கேறிய ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களுக்கு இடையூறாக நடந்து சென்றார். தள்ளாடி போதையுடன் வந்து கொண்டிருந்த அவர் மீது எதிர்பாராத விதமாக ஆட்டோ ஒன்று உரசிச் சென்றதாக தெரிகிறது.
இதில் சிறு காயமடைந்த போதை ஆசாமி ஆத்திரம் அடைந்து ஆட்டோ ஓட்டுநர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார். இதில் முகம் மற்றும் பல் உடைந்து பலத்த காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் அருகே உள்ள போக்குவரத்துக் காவலரிடம் புகார் தெரிவித்தார்.
அப்போது அங்கு வந்த போதை ஆசாமி "தன் மீது விபத்து ஏற்படுத்தி ஆட்டோ ஓட்டுநர் காலை உடைத்து விட்டதாகக்" கூறி போலீசாரிடம் அராஜகம் செய்துள்ளார். மேலும் சாலையில் செல்லும் வாகனங்களைச் செல்ல தடுத்து நிறுத்தி சாலையில் நடுவே படுத்து உருண்டார்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அவரை அப்புறபடுத்த வந்த போலீசார் மீதும் போதை ஆசாமி தகாத வார்த்தைகளைப் பேசியதுடன், தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார். இதனையடுத்து போதை ஆசாமியை இழுத்துச் சென்று சாலையின் ஓரத்தில் போட்டனர்.
வியாசர்பாடி அருகே நடுச்சாலையில் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியது மட்டும் அல்லாமல், போக்குவரத்துக் காவலர்களை தாக்க முயன்ற போதை ஆசாமியால் சிறுது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: “ஓடுற பஸ்ச ஒரே காலால எப்டி நிறுத்துனேன் பாத்தியா..” மதுப்பிரியருக்கு எலும்பு முறிவு.. மயிலாடுதுறையில் நடந்தது என்ன?