சென்னை: இந்தியா முழுவதும் ஏழு கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி துவங்கி வரும் 27ஆம் தேதி வரை உள்ளது.
அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை செனாய் நகரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் குமார் முன்னிலையில் பாஜக சார்பில் மத்திய தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்போது கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம், தமிழ்நாட்டைக் கடந்த மூன்று ஆண்டுகளாகச் சுரண்டி , தமிழ்நாட்டிற்குள் போதை கலாச்சாரத்தை அனுமதித்த திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளது.
கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் இன்று மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்து மக்களைச் சந்திக்கத் தயாராக உள்ளோம். மேலும் இந்தக் கூட்டணி தொடர்ச்சியாகச் செயல்பட்டு 2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டணியாக அமைந்துள்ளது.
கட்ட பஞ்சாயத்து, குடும்ப அரசியல், ஊழல் செய்யும் திமுகவிற்குப் பாடம் புகட்டும் தேர்தலாக இந்த தேர்தல் அமையும். நீட் ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களுக்குத் தான் தெரியும் என 2021ஆம் தேர்தலில் மக்களை ஏமாற்றியவர்கள் திமுக, பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.
நீட் தேர்வு ரத்து செய்வோம் என திமுக அரசு பொய்யான வாக்குறுதிகளை வழங்காமலிருந்தால் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை புரிவார்கள். மேலும் திமுக அரசு 2021ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாகத் தெரிவித்து தற்போது வரை குறைக்காமல், அதே தேர்தல் அறிக்கைக்கு வர்ணம் பூசி தற்போது புதிதாக வழங்கியுள்ளது
சென்னையில் மழை நீர் வடிகாலுக்காகச் செலவு செய்யப்பட்ட 400 கோடி குறித்து மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டார்கள். திமுக பதில் அளிக்கவில்லை என்றாலும், திமுகவிற்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பதில் அளிப்பார்கள். மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர், எம்பி தயாநிதி மாறன் கடந்த முறை வெற்றி பெற்றதற்கு பிறகு தொகுதிக்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே மோடியின் பத்தாண்டுக் கால ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்து எங்களை மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள் என்று நம்பிக்கையோடு இந்த தேர்தல் சந்திக்கிறோம். 2024 வெற்றிக்குப் பின்னர் முழுமையாகத் தொகுதியில் மக்களுக்காகக் களத்தில் இறங்கி பணியாற்ற உள்ளதாகவும், எம்பி நிதியிலிருந்து மக்களுக்குச் செய்யக்கூடிய அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த முறை மத்திய தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற தயாநிதி மாறன் எம்பி பொறுப்பில் இருந்து என்ன பணியாற்றினார்.
எம்பி பொறுப்பின் பணி என்ன என்பது தொடர்பாகத் தயாநிதி மாறன் உடன் நேரடியாக விவாதம் செய்ய நான் தயார், அவர் தயாரா என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என தமிழ்நாடு அரசு பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறது.
தமிழ்நாட்டிற்கு வழங்கக்கூடிய நிதிகளை முறையாகப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பப்படும் நிலையே உள்ளது. திமுக அரசு நிர்வாகத் திறன் அற்ற அரசாக இருப்பதாலே மக்களுக்காக வழங்கப்படும் நிதிகள் பயன்படுத்தப்படாமல் மக்கள் சிரமத்திற்குத் தள்ளப்படுகின்றனர் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தென் சென்னை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த ஜெயவர்தனன், தமிழச்சி மற்றும் தமிழிசை.. - South Chennai Candidates Nomination