விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியம் நன்னாடு ஊராட்சிக்கு உட்பட்டது வேடம்பட்டு கிராமம். சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இந்த கிராம பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தியா என்கிற மருத்துவர் ஒருவரால் மருத்துவ கழிவுகளை சுத்திகரிப்பு செய்யும் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது.
அந்த சுத்திகரிப்பு நிலையத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து மருத்துவக் கழிவுகளை சேகரித்து, அவற்றை தரம் பிரித்து சுத்திகரிக்கும் பணி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அந்த பணிகளை சரியான முறையில் செய்யாமல், அபாயமான மருத்துவ கழிவுகளை அந்த பகுதியிலேயே எரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
இதனால் அப்பகுதிகளில் கரும்புகை சூழ்ந்து காற்று மாசுபடுவதாகவும், பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், அந்த மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் அந்த பகுதியில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு விதமான நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மற்றும் தேமல், படர்தாமரை போன்ற தோல் நோய்களால் மக்கள் பாதிப்படைவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்! தீர்ப்பெழுதப் போகும் மக்கள்
குறிப்பாக சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் சுவாச கோளாறு பிரச்சனை ஏற்படுவதாகவும் புகாரளிக்கும் இம்மக்கள், அப்பகுதியில் உள்ள ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் இந்த மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையத்தால் பாதிப்படைவதாகவும் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நிறுவனத்தை அகற்றக் கோரி வேடம்பட்டு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை அந்த மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றக்கோரியும் மனு அளித்தும், மாவட்ட நிர்வாகம் தரப்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அம்மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் சுகாதார கேடு உள்ளிட்ட பல இன்னல்களைத் தரும் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றக்கோரி, வேடம்பட்டு கிராம மக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி, தேர்தலை புறக்கணிக்கப் போவதாகக் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இதையும் படிங்க: நெல்லை காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு.. கட்டுக்கட்டாகப் பணம் சிக்கியதாக தகவல்!