விழுப்புரம்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் மண்டல மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"இந்த வார இறுதி நாளான 05.04.2024 (வெள்ளிக்கிழமை) மற்றும் 06.04.2024 (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் பொதுமக்கள் கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை மற்றும் போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வார்கள் என்பதால் அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பாக, கூடுதலாக வெள்ளிக்கிழமை 150, சனிக்கிழமை 200 என மொத்தம் 350 சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இவ்வழித்தடங்களில் பயணிகள் https://www.tnstc.in என்கிற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இச்சிறப்பு பேருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும், அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்" என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இன்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்ட பொது மேலாளர் தலைமையில் விழுப்புரம் நகரப் பேருந்து நிலையத்தில் அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
அறிவுரைகள்: பேருந்துகளை இயக்கும் போது அனைத்து பேருந்து நிறுத்தங்களுக்கு முறையாகச் சென்றும், அட்டவணையிடப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் முறையாகப் பேருந்துகளை நிறுத்தியும், பயணிகளை ஏற்றியும், இறக்கியும் விட வேண்டும் எனவும், பயணிகள் பேருந்தில் ஏறி, இறங்கியதை உறுதி செய்த பின்னர் பேருந்தினை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும், கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் பயணிகள் உட்பட அனைத்து பயணிகளிடமும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், குறிப்பாக மகளிர், பள்ளி மாணவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் பேருந்துகளில் ஏறி, இறங்கும் போது அவர்களுக்கு உதவி செய்வதுடன் பயணத்தின்போது அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர உதவி செய்திட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணை மேலாளர் (வணிகம்) சிவக்குமார் மற்றும் பேருந்து நிலைய உதவி மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம்: கோவை மற்றும் திருநெல்வேலிக்கு வருகை தரும் ராகுல் காந்தி! - Lok Sabha Elections