கரூர்: கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சிக்கு உட்பட்ட புகலூர் காகிதபுரம் பகுதியில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் (TNPL) செயல்பட்டு வருகிறது. அதன் அருகாமையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்திற்கு சொந்தமான சிமெண்ட் ஆலையும் ( TNPL Cement) செயல்பட்டு வருகிறது.
இரு ஆலைகளும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கபட்டு, இயங்கி வருகின்றன. இந்நிலையில், சிமெண்ட் மற்றும் காகித ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு புகைகள் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசுபடுவதுடன், காற்றில் பறக்கும் துகள்கள் குடிநீர், தீவனங்கள் மீது விழுவதால் பல்வேறு உடல்நல உபாதைகள் ஏற்படுவதாக ஆளை நிர்வாகத்திற்கும், புகலூர் நகராட்சி நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்து வந்தனர்.
இந்நிலையில், காகித ஆலை நிறுவனம் முன்பு மூலிமங்கலம் பகுதி பொதுமக்கள் கடந்த சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், சிமெண்ட் மில் துகள்கள், ஹோமியோபதி கெமிக்கல் பிளான்ட் மூலம் வெளியேறும் புகையால், துர்நாற்றம் ஏற்பட்டு தலைவலி, மூச்சுத் திணறல் ஏற்படுவது குறித்து, புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினர்.
தொடர்ந்து காகித ஆலை அலுவலகம் அமைந்துள்ள கேட் எண்: 2ன் முன்பு பொதுமக்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 1 மணிக்கு நுழைவாயில் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதில் மதியம் 2 மணி ஷிப்ட் பணிக்கு செல்ல முடியால், டிஎன்பிஎல் காகித ஆலை தொழிலாளர்கள் காத்திருந்தனர்.
சம்பவம் அறிந்து, புகலூர் நகராட்சி தலைவர் சேகர் உள்ளிட்ட திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் மூலிமங்கலம் பொதுமக்கள் ஆகியோரிடம், டிஎன்பிஎல் ஆலை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில், பொதுமக்களின் பாதிப்புகள் குறித்து உடனடியாக ஆலை சார்பில் ஒரு மாதத்தில் ஆய்வு நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக விலக்கி வைத்துக்கொண்டு, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இதனால் ஆலை முன்பு சுமார் இரண்டு மணி நேரமாக பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தனியார் பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து; தீயை அணைக்க வீரர்கள் பல மணி நேரம் போராட்டம்!