திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட கோமுட்டேரி பகுதியில், ஆலங்காயம் பேரூராட்சி சார்பில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் தரம் பிரிக்கும் குப்பைக் கிடங்கு அமைக்க பேரூராட்சியில் முடிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், அதற்கான இடத்தை பேரூராட்சி அதிகாரிகள் ஏற்கனவே தேர்வு செய்தனர்.
இந்நிலையில், குப்பைக் கிடங்கு அமைக்க தொடர்ந்து விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் பேரூராட்சி அதிகாரிகள் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் 25க்கும் மேற்பட்ட காவல்துறையினர், பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் நேற்று கோமுட்டேரி பகுதியில் உள்ள விவசாய நிலம் அருகே இருக்கும் இடத்தை அதிகாரிகள் அளவீடு செய்யச் சென்றனர்.
அப்போது கோமுட்டேரி பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தி, விவசாய நிலம் அருகே குப்பைக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அதிக அளவில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், உடனடியாக அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இடத்தை அளவீடு செய்யாமல் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, குப்பைக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இடத்தை அளவீடு செய்யச் சென்ற அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கோமுட்டேரி பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது ஆலங்காயம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், ஆலங்காயம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக கோமுட்டேரி பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 7 பேர் மீது ஆலங்காயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குப்பைக் கிடங்கு அமைப்பது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, "இப்பகுதியில் குப்பைக் கிடங்கு அமைத்தால் விவசாய நிலங்கள் மற்றும் குடிநீரில் பாதிப்பு ஏற்படும் எனவும், மக்களுக்கு நோய்த்தொற்று உண்டாகும் வாய்ப்பு உள்ளதாகவும், மருத்துவனையும் வெகுதொலைவில் உள்ளதாக தெரிவித்தனர். மேலும் இத்திட்டத்திற்குப் பதிலாக பள்ளி, மருத்துவமனை, வணிக வளாகம் உள்ளிட்ட திட்டங்களை அரசு கொண்டுவர கோரிக்கை வைத்துள்ளனர்".
இதையும் படிங்க: அரசு வேலை தருவதாக கூறிய முன்னாள் ஆட்சியர்..குழந்தையுடன் கண்ணீர் மல்க மனு அளித்த பெண்!