திருநெல்வேலி: பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நேற்று (பிப்.28) நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். முன்னதாக தூத்துக்குடியில் நடைபெறும் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கும் நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு, ஹெலிகாப்டர் மூலமாக திருநெல்வேலி பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி வந்தார்.
இந்த பொதுக்கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பல்வேறு பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், இந்த பொதுக்கூட்டத்தில், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீங்கி பாஜகவில் இணைந்த விஜயதாரணி கலந்துகொண்டார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய விஜயதாரணி கூறியதாவது, “நான் தற்போது பாஜகவில் இணைந்துள்ளேன் என்றால், நீங்கள் அதற்கான தாக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும். 37 ஆண்டுகள் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்துள்ளேன். காங்கிரஸில் தலைமை பொறுப்பிற்கு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவி பதவிக்கு என்னை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பலர் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், காங்கிரஸ் கட்சி என்னை நிராகரித்துவிட்டது. அவர்கள் இந்தி பேசும் மாநிலத்திலிருந்து தலைமை பொறுப்புக்கு பெண்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இத்தனை ஆண்டு காலம் கட்சியிலிருந்த எனக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டது. திறமைமிக்க பெண்களை ஊக்குவிக்காத கட்சியாக காங்கிரஸ் திகழ்கிறது.
பெண்களுக்கு முக்கியத்துவம்: பெண்கள் தலைமை பதவிகள் வகிப்பதை காங்கிரஸ் விரும்புவதில்லை. அவர்கள் அடிமை மனப்போக்குடன் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். அதிலிருந்து மீண்டு தனித்தன்மையோடு இயங்கவில்லை என்றால், காங்கிரஸ் அழிவுப் பாதையை நோக்கிதான் செல்லும். அவர்களுக்கு தமிழ்நாடு வேண்டாம், ஆனால் பாஜகவுக்கு தமிழ்நாடு வேண்டும்.
மேலும், பிரதமர் மோடி, பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை சட்டமாக்கியுள்ளார். இஸ்லாமியர்களின் 'முத்தலாக்' நடைமுறையை ஒழித்தவர். இஸ்லாமியப் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வாங்கித் தந்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் 2024-இல் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்வார்.
தமிழுக்கு முக்கியத்துவம்: காங்கிரஸ் கட்சி இந்திக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கிறது. ஆனால், பிரதமர் மோடி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்களுடன் கூட்டணி வைத்தால் மட்டும் போதாது, தமிழ் வேண்டுமென்றால், உண்மையாக அந்த உணர்வோடு தமிழர்களையும் உயர்த்தி பிடிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: அழைப்பு விடுக்கும் திமுக.. பேச்சுவார்த்தைக்கு செல்ல மறுக்கும் விசிக.. அதிருப்திக்கு காரணம் என்ன?