கன்னியாகுமரி: மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டு, கடந்த 2018ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. பம்மம் பகுதியில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (மே 7) காலை அதிக பாரம் ஏற்றிச்சென்ற கனரக லாரிகள் வரிசையாக மேம்பாலத்தில் நின்றதாக கூறப்படும் நிலையில், மேம்பாலத்தின் சாலையின் மையப்பகுதியில் 2 மீட்டர் விட்டத்தில் சிமெண்ட் கலவை உடைந்து விழுந்து பள்ளம் ஏற்பட்டது.
இந்தச் சூழலில், மார்த்தாண்டம் மேம்பாலத்தின் தரத்தை உயர்மட்ட நிபுணர் குழு பரிசோதித்து, அதற்கான தரச்சான்றிதழ் வழங்கிய பின்னரே மேம்பாலத்தை முழு உபயோகத்திற்கு அரசு கொண்டு வர வேண்டும் என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதில், "கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம், கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த மேம்பாலத்தை திறந்து வைத்தபோது மக்கள் மத்தியில் இந்த மேம்பாலத்தின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகள் எழுந்தது.
மேலும், நாளடைவில் மேம்பாலத்தின் மேல் போடப்பட்ட சாலையில் அடிக்கடி குழிகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதன் காரணமாக, ஒவ்வொரு முறையும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் பாலத்தின் சாலையில் மேல் பூச்சு வேலைகள் மட்டும் செய்து வந்ததோடு, இந்த சாலையைப் பராமரிக்காமல் நெடுஞ்சாலைத் துறை காலம் கடத்தியும் வருகிறது.
இந்த நிலையில், தற்போது மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம் மேம்பாலத்தின் பாதுகாப்பு குறித்து சந்தேகத்தை மக்களிடம் எழுப்பியுள்ளது. இனிமேலும் இந்த பாலத்தில் சகஜமாகப் பயணம் மேற்கொள்வது என்பது மக்களின் உயிரைப் பணயம் வைப்பதாகும்.
ஆகவே, தேசிய நெடுஞ்சாலைத் துறை உடனடியாக இந்த மேம்பாலத்தின் தரத்தையும், உறுதியையும் சோதிக்க ஒரு உயர்மட்ட நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். அந்த நிபுணர் குழுவின் ஆய்வு அறிக்கையை வைத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு ஆராய வேண்டும்.
இனியும் நெடுஞ்சாலைத் துறை மேம்பாலத்தின் சாலையில் மேல் பூச்சு வேலைகளைச் செய்யாமல், தரமாக செப்பனிட வேண்டும். அது வரையிலும் மேம்பாலத்தில் கனரக வாகனங்களை அனுமதிக்கக் கூடாது. அதே போல், இதே கால அளவில் கட்டப்பட்டு அடிக்கடி சேதமடையும் நாகர்கோவில் பார்வதிபுரம் பாலத்தினையும் நிபுணர் குழு மூலம் ஆராய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "மக்கள் சந்தோஷமாக இருப்பதை முதலமைச்சர் நேரில் சென்று பார்த்தாரா?" - பிரேமலதா விஜயகாந்த் கேள்வி!